தூத்துக்குடியில் பயங்கரம் – காதல் திருமணம் வெட்டி படுகொலை – தந்தை கைது!
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துக்கொண்ட தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, முருகேசன் நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வசந்தகுமார். இவரது மகன் மாரிச்செல்வம் (23), இவரும், கார்த்திகா என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
கார்த்திகாவின் குடும்பத்தினர் வசதி படைத்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த காதல் விவகாரம் கார்த்திகாவின் பெற்றோருக்கு தெரிய வர, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
ஆனால், காதலில் இவர்கள் இருவரும் உறுதியாக இருந்ததால், தேவர் ஜெயந்தி அன்று இருவரும் வீட்டை விட்டு வெளியே திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரையும் மாரிச்செல்வத்தின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டு இருவரையும் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.
இதனால், மாரிச்செல்வம் வீட்டுக்கு பெண் தந்தை முத்துராமலிங்கம் மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று 3 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் காதல் ஜோடிகளை சராமரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.
இது குறித்து போலீசார் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் இருந்த காதல் ஜோடிகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்தக் கொலைக்கு மூலக்காரணமாக இருந்த பெண்ணின் தந்தை முத்துராமலிங்கத்தை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.