புதுக்கோட்டையில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 119 வழக்குகளுக்கு தீர்வு!
புதுக்கோட்டையில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 1708 வழக்குகள் விசாரனைக்கு எடுக்கப்பட்டு 119 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ. 2,15,76,121/- தொகைக்கான சமரச முடிவு ஏற்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
தேசிய சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படியும், புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி K.பூர்ண ஜெய ஆனந்த் வழிகாட்டுதலின்படியும், குடும்பநல வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக்
அதாலத்)14.10.2023 அன்று புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றதிற்கு, புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான K.பூர்ண ஜெய ஆனந்த் தலைமை தாங்கிஉரையாற்றினர்.
அவர் பேசியதாவது, இந்த மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 22,000-த்திற்கும் மேற்பட்டவழக்குகள் நிலுவையில் உள்ளது. அனைத்து வழக்குகளையும் ஒரே நேரத்தில் முக்கியத்துவம் கொடுத்து முடித்து விடமுடியாது. காலவிரயமும் பொருள் விரயமும் தவிர்க்கப்பட வேண்டும்.
“விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை” அந்த அடிப்படையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சமரசமாக பேசினாலே வழக்குகள் எளிதில் தீர்மானிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். “சாட்சிக்காரர் காலில் விழுவதைவிட சண்டைக்காரர் காலில் விழுவதே மேல்” என்று முதுமொழி இருக்கிறது.
அதனடிப்படையில் தரப்பினர்கள் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து தங்களது எதிர்த்தரப்பினர்களுடன் சமரசம் பேச முற்பட்டாலே அவர்களுக்கிடையேயான அனைத்து பிரச்சினைகளுக்கும் இறுதியாகவும் சுமூகமாகவும்
தீர்க்கப்பட்டுவிடுகிறது.
சமரசத்தீர்வினால் மேல்முறையீடு இல்லாமல் வழக்கு இறுதி நிலையை அடைகிறது. நீதிமன்றக் கட்டணமும் திரும்பப் பெறப்படுகிறது.
மேலும் இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் புதுக்கோட்டை மாவட்ட குடும்பநல நீதிபதி S.ஜெயந்தி, கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி G.M.வசந்தி, அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு மாவட்ட நீதிபதி A.K.பாபுலால், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின்
செயலாளரும் சார்பு நீதிபதியுமான E.ராஜேந்திர கண்ணன், முதன்மை சார்பு நீதிபதி மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி (பொறுப்பு) S.சசிகுமார், நீதித்துறை நடுவர் எண்.1 நீதிபதி M.ஜெயந்தி, ஆகிய நீதிபதிகள் கொண்ட ஐந்து அமர்வுகள் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 11 அமர்வுகளில் நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள், குடும்பநல
வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி மற்றும் வங்கி வராக்கடன் வழக்குகள் என மொத்தம் 1708 வழக்குகள் விசாரனைக்கு எடுக்கப்பட்டு அதில் 119 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டு சுமார் ரூ. 2,15,76,121/- தொகைக்கான சமரச முடிவு ஏற்பட்டு வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன.
அமானுல்லா புதுக்கோட்டை