Sun. Oct 6th, 2024

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை : கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி – ம. முஹம்மது கவுஸ்!

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட தமிழக முதலமைச்சருக்கு மாநிலத் துணைத் தலைவர் ம. முஹம்மது கவுஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் தமிழ்நாட்டை ஆண்ட ஆளும் திராவிட கட்சிகள் ஒருமித்து நிற்பதற்கு நமது வாழ்த்துக்களை பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையில் தமிழ்நாடு அரசு நியமித்த ஆதிநாதன் கமிட்டி அறிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்ட உடன் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது முஸ்லிம் சிறைவாசிகள் விவகாரத்தை ஆளும் அரசு கை கழுவும் போக்காகவே தெரிகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 22 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் முஸ்லிம் சிறைவாசிகள் விவகாரத்தில் ஆளுநர் விடுவிக்க வேண்டும் என்ற முடிவை எடுப்பார் என்ற தமிழ்நாடு அரசு இல்லாத ஊருக்கு காட்டும் வழியாகும்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்து பந்தை ஆளுநர் பக்கம் தள்ளி விடுவதை நிறுத்திவிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் 161 சட்டப்பிரிவை பயன்படுத்தி தீர்மானம் நிறைவேற்றி முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விடுதலை செய்வது மட்டுமே தீர்வாக அமையும்.

தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்த அதிமுக அரசு முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் சிறு துரும்பை கூட கிள்ளி போடாமல் இப்பொழுது இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன் என சிறுபான்மை சமூகத்திற்கு நன்றாகவே புரியும் என சொல்லும் முதலமைச்சர் அவர்களே.., முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையை ஆளும் திமுக அரசு ஆளுநரின் பக்கம் தள்ளி விடுவது ஏன் எனவும் தமிழ்நாடு முஸ்லிம்களுக்கு தெரியாமல் இல்லை என்றார்.