ஆறுகள் இணைப்புத் திட்டம் – நிலமெடுக்கும் விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி இழப்பீடு தொகை வழங்க வேண்டி விவசாயிகள் சங்கம் போராட்டம்
காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தில் நிலமெடுக்கும் விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் திங்கள்கிழமை விவசாயிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.
காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக தேவைப்படும் இடங்களில் விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு கையகப்படுத்தப்படும் இடங்களுக்கு அரசு தரப்பில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, அருகருகே உள்ள இடங்களுக்கு வெவ்வேறு வகையான இழப்பீட்டுத்தொகை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, இழப்பீட்டுத் தொகையை பாரபட்மின்றி வழங்க வேண்டும். 411 (6.8.20), அரசாணையைப் பயன்படுத்தி ஏக்கருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கிணறு ஒன்றுக்கு ரூ. 1 கோடி இழப்பீடாக வழங்க வேண்டு;ம். வீடு, மரம் உள்ளிட்ட சேதாரம் ஏற்படும் பொருட்களுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கீரனூரில் திங்கள்கிகமையன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
கீரனூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கே.பழனிச்சாமி தலைமை வகித்தார். போராட்டத்தைத் தொடங்கி வைத்து மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன் பேசினார். போராட்டத்தில் கலந்துகொண்டு மாநில துணைத் தலைவர் கே.முகமதுஅலி கண்டன உரையாற்றினார்.
கோரிக்கைகளை விளக்கி மாவட்ட துணைச் செயலாளர் த.அன்பழகன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.பெருமாள், பி.செல்வராஜ், விச ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரெங்கராஜ், சாமிக்கண்ணு உள்ளிட்டோர் பேசினர்.
அமானுல்லா புதுக்கோட்டை