காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிமுக உறுதுணையாக நிற்கும் – எடப்பாடி பழனிச்சாமி!
தமிழகத்தில் இன்று சட்டப்பேரவை கூடியது. காவிரி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை கொண்டு வந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், எந்த சூழலிலும் தமிழ்நாட்டுக்கு தேவையான காவிரி நீரை விட்டு தராமல் பெற்று தருவோம்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசிற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
இதன் பிறகு, சட்டப்பேரவையிலிருந்து பாஜக உறுப்பினர்கள் முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தில் முழுமையாக இல்லை என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.
ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசின் தனித்தீர்மானத்திற்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், தமிழக பாஜக, காங்கிரஸ் தண்ணீர் திறக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், கர்நாடக பாஜக, காங்கிரஸ் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்கின்றனர். கர்நாடகாவைப் பொறுத்தவரை தேசிய கட்சிகள்தான் அங்கு ஆட்சி செய்து வருகிறது. எனவே, தமிழ்நாடு அரசு முழு மனதோடு செயல்பட்டால்தான் நமக்கு நீர் கிடைக்கும். காவிரியில் உரிய நீர் பெற அதிமுக எப்போதும் துணை நிற்கும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
இதன் பிறகு, சட்டப்பேரவையில் காவிரி நீர் தொடர்பான முதலமைச்சரின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது