Fri. Dec 20th, 2024

“இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை” – அமைச்சர் செஞ்சிமஸ்தான் தகவல்!

பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் பல ஆண்டுக் காலமாக மோதல் நிலவி வருகிறது.

பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்குரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகிறது.

நேற்று பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் ‘ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்’ என்ற பெயரில் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.

காசாவில் 20 நிமிடங்களில் சுமார் 5 ஆயிரம் ராக்கெட்டுக்களை இஸ்ரேல் மீது ஏவியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தியது.

தற்போது இஸ்ரேல் பதிலுக்கு தாக்குதல் நடத்தத் துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்தியர்கள் அவசர தேவைக்கு 97235256748 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அல்லது cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இஸ்ரேலில் உள்ள சென்னை ஆலந்தூரை சேர்ந்த 15 பேரும், கோயம்புத்தூரை சேர்ந்த 3 பேரும் அயலக தமிழர்கள் நலவாரியத்தை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சர் சஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.