Sun. Oct 6th, 2024

புதுக்கோட்டையில் மாரத்தான் போட்டி – சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்

புதுக்கோட்டையில் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில், மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் , இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, உலகத்தரத்திலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறார். அந்தவகையில் இன்றையதினம் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி துவக்கி வைக்கப்பட்டது.

இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரால் அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்டத்தின் மூலம் மாரத்தான்போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி துவக்கி வைக்கப்பட்டது.

இதில் 400 -க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் மற்றும் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.5000/-ம் வீதம் 4 நபர்களுக்கும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.3000/-ம் வீதம் 4 நபர்களுக்கும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.2000/-ம் வீதம் 4 நபர்களுக்கும், நான்கு முதல் பத்தாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.1000/-ம் வீதம் 28 நபர்களுக்கும் பரிசு தொகை வழங்கப்படுகிறது.

எனவே தமிழக அரசால் செயல்படுத்தப்படும் விளையாட்டு தொடர்பான திட்டங்களை விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சிறப்பான முறையில் பயன்படுத்தி விளையாட்டில் முன்வர வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதிசெந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அமானுல்லா
புதுக்கோட்டை