வீட்டை அபகரித்து அடித்து நடுதெருவில் நிற்க வைத்த மகன் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் கண்ணீர்
வீட்டை அபகரித்து, சோறு போடாமல் மகன் அடித்து துன்புறுத்தியதால் தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஈரோடு மாவட்டம், திருநகர் காலனியைச் சேர்ந்தவர் திலகவதி. இவரது கணவர் உயிரிழந்து விட்டதால், தன் இரு மகன்களுடன் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்.
இரு மகன்களும் தாயை சரியாக கவனிக்கவில்லை. இதனால், திலகவதி இருவரையும் வீட்டை காலிசெய்யும்படி கூறியுள்ளார்.
இதில் 2-வது மகன் செந்தில் வீட்டை காலி செய்யாமல் இருந்துள்ளார். திலகவதிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக மூத்த மகன் கார்த்திக் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்துள்ளார்.
திரும்பி வந்த திலகவதி வீட்டை அடைந்தபோது வீடு பூட்டு போட்டிருந்தது. இது குறித்து மகனிடம் கேட்க, உனக்கு வீடு இல்லை. வீட்டை விட்டு வெளியே போ என்று கூறியுள்ளார்.
இதனால், செல்ல இடமில்லாமல் திலகவதி தவித்துள்ளார். இதனையடுத்து, கருங்கல்பாளையம் காவல் நிலையம் மற்றும் ஆட்சியர் குறைதீர்ப்பு கூட்டத்தில் திலகவதி புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகார் மீது யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனையடுத்து, தங்க வீடில்லாமல் உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் திலகவதி தங்கி வருகிறார்.
இந்நிலையில் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து, வீட்டை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்க அவர் கோரிக்கை வைத்தார். அவர் அழுததைப் பார்த்த அங்கிருந்தவர்கள் மனம் உறைந்து போனார்கள்.