Fri. Dec 20th, 2024

சனாதன விவகாரம் – தமிழக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய ஆளுநரிடம் வலியுறுத்தல்!

சனாதன விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபுவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ரவியை சந்தித்து விஹெச்பி தலைவர்கள் வலியுறுத்தினர்.

சென்னையில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.

கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்” என தெரிவித்திருந்தார்.

உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உதயநிதியின் பெயரைக் குறிப்பிடாமல், அவர் பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். சனாதன ஒழிப்பு தொடர்பான பேச்சுக்கு உரிய பதிலடி கொடுக்கும்படி பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், விஸ்வ இந்து பரிஷத்தின் தேசிய செயல் தலைவர் அலோக் குமார், அகில பாரதிய சந்த் சமிதியின் பொதுச் செயலாளர் தண்டி சுவாமி ஜீதேந்திரானந்த சரஸ்வதி, வெள்ளிமலை ஆசிரமத்தின் சைதன்யானந்தா சுவாமி மதுராநந்தா உள்ளிட்டோர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, ஆளுநர் மாளிகையில் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக மனு அளித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வ இந்து பரிஷத்தின் தேசிய செயல் தலைவர் அலோக் குமார், “சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது பொறுப்பற்ற செயல். சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கை செயல்.

இது நேரடியாக அரசியல் சாசனத்தை மீறும் செயல். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சரின் பேச்சு வெறுப்பை பரப்பக்கூடியது; இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை உண்டாக்கக்கூடியது. இந்திய தண்டனைச் சட்டப்படி இது ஒரு குற்றச் செயல்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை பராமரிக்கும் பாதுகாக்கும் இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர்பாபு இதில் கலந்து கொண்டது மிக மோசமான செயல். அதோடு, அறநிலையத் துறை அமைச்சராக தனது அலுவலக கடமைகளை மீறிய குற்றத்தையும் அவர் செய்துள்ளார்.

இது இரண்டு கேள்விகளை எழுப்புகிறது. ஒன்று, அரசியல் சாசனத்தின் படி பதவி ஏற்ற அமைச்சர்கள், அரசியல் சாசனத்துக்கு எதிராகச் செயல்பட்டிருப்பதால், அவர்கள் அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதி அற்றவர்களாகிறார்கள். இரண்டாவது, அமைச்சரின் இந்தப் பேச்சு, அரசின் கருத்து அல்ல என்று தமிழ்நாடு அரசு மறுக்கவில்லை. எனவே, அமைச்சரின் பேச்சு, அரசின் கருத்தாக ஆகிறது.

இந்த விவகாரம் குறித்து உரிய பரிசீலனையை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள், ஆளுநரை கேட்டுக்கொண்டோம். அரசியல் சாசனத்தின்படி தமிழ்நாடு அரசு இயங்க முடியாது என்றால், அது குறித்து குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளிக்குமாறு ஆளுநரை கேட்டுக்கொண்டோம். இதுபோன்ற ஒரு சூழல் தொடர அனுமதிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகிய இரண்டு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும், தமிழக அரசின் நிலை தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும், இதுதொடர்பாக மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஜனநாயகத்தை விரும்பும் நாட்டு மக்கள் குறிப்பாக தமிழக மக்கள், நாட்டின் மதச்சார்பற்றத் தன்மையைப் பாதுகாக்கும் வகையில், இத்தகைய கருத்துகளை ஒரே குரலில் எதிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.