“அவளுடன் நானும் இறந்துவிட்டேன்..” – விஜய் ஆண்டனி உருக்கமான பதிவு!
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த 19ம் தேதி அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்செய்தி ரசிகர்களையும், சினிமாதுறையினரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.
சமூகவலைத்தளங்களில் விஜய் ஆண்டனியின் மகளுக்கு சினிமாத்துறையினரும், ரசிகர்களுக்கும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து, விஜய் ஆண்டனி மகள் மீராவின் இறுதி சடங்கு கீழ்பாக்கம் கல்லறையில் நடைபெற்றது. தேவாலயத்தில் பிரார்த்தனைக்குப் பின் உடல் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மகள் குறித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “அன்பு நெஞ்சங்களே என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்.
அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கிவைப்பாள் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.