Fri. Dec 20th, 2024

54 வயது நபரை காதல் திருமணம் செய்த 24 வயது இளம் பெண் – சேலத்தில் பரபரப்பு சம்பவம்!

சேலம் மாவட்டத்தில் 24 வயது பட்டதாரி பெண் ஒருவர் 54 வயது தொழிலாளியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர், தாரமங்கலத்தைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி கிருஷ்ணன். இவருக்கு வயது 54. இவருடைய மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால், இவர் 10 வருடங்களாக தனிமையில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில்,இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த விமலா என்ற 24 வயது பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலாக மாறியது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருவண்ணாமலைக்கு சென்று, அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இத்தகவலை அறிந்த பெண்ணின் தந்தை அய்யம்பெருமாள், தன் மகளை கிருஷ்ணன் கடத்திச் சென்று விட்டதாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரை பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு இருவரையும் தேடி வந்தனர். இத்தகவலை அறிந்த தம்பதி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

காவல் நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் தங்களுடன் திரும்பி வந்துவிடுமாறு கேட்டனர். ஆனால், அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்து விட்டார். தன் காதல் கணவருடன் செல்வதாக போலீசாரிடம் விமலா கூறியதால், இருவரும் மேஜர் என்பதால் போலீசார் இருவரையும் அனுப்பி வைத்தனர்.