Thu. Dec 19th, 2024

ஒரே காரில் போலீஸ் போர்டு… பா.ஜ.க கொடி -மிரட்டிக்கொண்டு திரியும் பா.ஜ.க பிரமுகர்!

ஒருபக்கம் பா.ஜ.க கொடி இன்னொரு பக்கம் ’போலீஸ்’ என்று போர்டு போட்டுகொண்டு கெத்தாக திரிந்துகொண்டிருக்கிறது மஹேந்திரா ஜீப்.
காவல்துறையினர் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என்கிற ’ஸ்டிக்கர்’ ஒட்டக்கூடாது என்று காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதாவது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கார் கண்ணாடிகளில் உள்ளே இருப்பவர்கள் யார் என்பது தெரியாத அளவுக்கு கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல்- 27 ந் தேதி மத்திய அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஜூன் 14 ந் தேதி ஒரு வழக்கில் காவல்துறை அதிகாரிகள் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என்கிற ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது என உத்தரவிட்டப்பட்டது.


இதனால், காவல்துறையினர் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என்ற பலகையோ ஸ்டிக்கரோ காட்சிப்படுத்தும் வகையில் ஒட்டக்கூடாது என்று காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அப்படியிருக்க, பா.ஜ.க கொடியும் போட்டுக்கொண்டு இன்னொரு பக்கம் ’போலீஸ்’ என்று போர்டு வைத்துக்கொண்டு திரியும் அந்த வாகனம் யார் என்று விசாரித்தபோதுதான் அதிர்ச்சி கிடைத்தது.


இதுகுறித்து விசாரித்தபோது, ”பாளையங்கோட்டையைச் சேர்ந்த கஜராஜசேகர் என்பவரின் மஹேந்திரா ஜீப் தான் இது. இவர் வெளிநாட்டில் இருப்பதால் இவரது அப்பா டாக்டர் குணசேகர்தான் இந்த ஜீப்பை பயன்படுத்தி வருகிறார். இவர், பா.ஜ.க.வில் முக்கிய பிரமுகராக இருப்பவர். இவரது மனைவி சென்னையில் போலீஸாக இருக்கிறார். ஆனால், இவரது சொந்த பயன்பாட்டில் இருக்கும் வாகனத்தில் சட்டத்துக்குப்புறம்பாக, டி.ஜி.பியின் உத்தரவைக்கூட மதிக்காமல் போலீஸ் என்று போர்டு போட்டுக்கொண்டு கெத்தாக வலம் வருகிறார். அதுமட்டுமல்ல, இவர் இ.எஸ்.ஐ.யில் பணிபுரிகிறார். அப்படிப்பார்த்தால், இவர் பா.ஜ.க பொறுப்பிலேயே இருக்கமுடியாது. ஆனாலும் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்திக்கொண்டு மிரட்டிக்கொண்டு திரிகிறார் என்று ஷாக் கொடுக்கிறார்கள்.


யார் அந்த போலீஸ்? என்பதை விசாரித்து நடவடிக்கை எடுப்பதோடு, டாக்டர் குணசேகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறையினரே கோரிக்கை வைக்கிறார்கள்.
-எம்.ரஞ்சித்