Fri. Dec 20th, 2024

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் – பரிகாரங்களும் |

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் – பரிகாரங்களும் |

நட்சத்திர குறியீட்டில் ஒன்பதாவதாக வருகின்ற ஆயில்யம் நட்சத்திரம் சுருண்டு இருக்கும் பாம்பின் வடிவம் கொண்டதாகும், நட்சத்திர தேவதை நாகராஜனும் நட்சத்திர அதிபதி புதனும் நட்சத்திர மரமாக புன்னையும், நட்சத்திர பறவை கிச்சிலியும், கணங்களில் ராட்சஷ கணமும் ஆகும். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தி கூர்மையும் மனவலிமையும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். உங்களால் அனைத்து துறைகளிலும் திறம்பட செயலாற்ற இயலும். ரகசியங்களை கட்டி காப்பாற்றும் நீங்கள் ஒரு போதும் உங்களுடைய திட்டங்களை எதையும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டிர்கள், தகுந்த சமயத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காரியத்தை சாதிப்பீர்கள், காதல் விஷயத்தில் கூட லாப நஷ்ட கணக்குகளை பார்க்கும் உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக வரும் மனசாட்சியை விட மூளையை அதிகம் நம்பும் உங்களுக்கு அரசியல் ஏற்றதாகும். உயிர்க்கொல்லி விஷ மருந்துகள், ரசாயன உரங்கள், விஷ ஜந்துக்களை கையாளுதல், கணக்கு வழக்கு பார்த்தல், திட்டம் தீட்டுதல் ஆகியவை ஆயில்ய நட்சத்திர காரகத்துவ குணங்களாகும். சுய ஜாதகத்தில் ஆயில்ய நட்சத்திரத்தில் கேது இருந்து குரு பார்த்தால் ரசவாத வித்தைகள் கைகூடும், ஆன்மீக பாதையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்…

ஆயில்யத்தில் ராகு, சனி ஆகியோர் இருந்து குரு பார்க்கப்பட்டு ஜீவன ஸ்தானத்தோடு தொடர்பு கொண்டால் மந்திரம் எந்திரம் போன்ற தொழில் சிறப்பாக வரும். சுப காரியங்களை ஆயில்ய நட்சத்திரத்தில் செய்தல் கூடாது. ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த சில பெண்களுக்கு ஆன்மீக நாட்டத்தை அதிகரித்து திருமணத்தை தள்ளிப்போட வாய்ப்பும் உண்டு ஆயில்ய நட்சத்திர நாட்களில் கருப்புநிற வஸ்திரங்களை அணிதல் கூடாது. பரிகாரம் – திருக்காளத்தி திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், நாகர்கோவிலில் அமைந்திருக்கும் நாகராஜா கோயில் ஆகிய ஸ்தலங்களுக்கு தேய்பிறையில் சப்தமி திதி வருகின்ற நாட்களில் சென்று வணங்கி வந்தால் நோய் நொடிகள் குணமாகும். குறிப்பாக சப்தமி நாட்களில் சப்த கன்னியரை வணங்கி வழிபட்டு, ஏழு ஏழை எளிய கன்னிப் பெண்களை சப்த கன்னியாராக பாவித்து அவர்களை வணங்கி தலா தட்சணையாக 160 ரூபாயும் இனிப்புடன் சேலை குங்குமம் கண்ணாடி வளையல்களை கொடுத்து அவர்களிடம் ஆசிபெற வேண்டும். முடிந்தால் ஒரு முறை நாச்சியார் கோவிலில் உள்ள கல்கருடனை தரிசனம் செய்வதன் மூலம் திருமணத்தடை, பொருளாதார தடை நீங்கி வாழ்க்கை வளம் பெறுவதை கண்கூடாக காண்பீர்கள்…

உங்கள் அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்