வாகன மோகத்தால் நேரும் சோகம்| பெருகி வரும் சாலை விபத்து விதி மீறல்களின் விளைவா? |
ஜூலை 21-2019
விதிமுறைகள் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பொருந்துமா..?
சென்னையை பொறுத்த வரை… பலதரப்பட்ட மக்கள் இங்கு தங்கி பணிபுரிந்தும், படித்தும் வருகின்றனர். இங்கிருக்கும் மக்கள் தொகை அளவிற்கேற்ப இருசக்கர வாகனங்கள் அளவும் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. அதுமட்டுமின்றி ஆங்காங்கே சிலர் செய்யும் சிறு விதிமீறல்கள் கூட சில நூறு உயிர்களை பலி வாங்கிவிடுகிறது. குறிப்பாக சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிக்னல் விளக்குகளை மதிக்காமல் செல்வதாலும், தலைக்கவசம் அணியாமல் செல்வதாலும் பெரும்பாலான விபத்துகள் நிகழ்வதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி குடிபோதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது மற்றும் அதி வேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்வது போன்ற சில காரணங்களால் பெருமளவில் விபத்து நிகழ்கின்றன. சாலை விபத்துக்களை பொறுத்தவரை விபத்தில் சிக்கி உயிர் இழப்போர் 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம்.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை காவல் துறை சார்பில் பல ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும்… அவை சரிவர பின்பற்றப்படுகின்றனவா என்பதே பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.
முன்பு இருந்ததை விட தற்போது வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் வாகனங்களின் வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் மட்டுமே வாகனங்கள் தயாரிக்கப்படுகிறது. மாறாக அதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை சரிவரக் கவனிக்காமலேயே இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யப்படுவதாக சமூக ஆர்வலர் தரப்பிலிருந்து ஒரு பெரும் குற்றச்சாட்டு எழுகிறது.
ஏனெனில் சாலை விபத்தில் மரணிக்கும் இளைஞர்கள் பலரது வாகனத்தின் விலையானது லட்சங்களைத் தாண்டியும், ஆற்றல் திறனும் அதிகம் கொண்டதாகவும், எடை குறைவாக உள்ளதாகவும் மட்டுமே உள்ளது. இதன் காரணமாகவே வாகனங்களை ஒட்டும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேரிடுவதாகவும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
சாலை விபத்துகளை பெரும்பாலும் தவிர்க்க காவல் துறை மட்டும் பல முயற்சிகள் மேற் கொண்டால் போதாது… வீடுகளில் பெற்றோர்களும் அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் இருசக்கர வாகனங்கள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் ஆசைக்காக அவர்களுக்கு வாங்கித்தரும் இருசக்கர வாகனங்கள் அவர்களின் உயிரை பறிக்கும் எமனாக மாறிவிடும் என்பதனை அவர்கள் முதலில் உணர வேண்டும்…
-நிருபர் சதீஷ்