பள்ளி நில உரிமையாளர் மிரட்டல்| பெற்றோர்கள் அச்சம் |
பள்ளி நில உரிமையாளர் மிரட்டல்| பெற்றோர்கள் அச்சம் |
ஜூலை , 10, 2019
வாடகை நிலத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியை இடம் மாற்றக்கோரி,நிலத்தின் உரிமையாளர் அடியாட்களுடன் பள்ளியிலுள் மது பாட்டில்களுடன் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதால்,பெற்றோர்களும் மாணவர்களும் அச்சமடைந்துள்ளனர்.
மதுரவாயலை அடுத்த நெற்குன்றத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.நேற்று காலை வழக்கம் போல் தங்களது பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது பள்ளியின் நுழைவாயில் பூட்டு போடப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாகியும், பள்ளியின் நுழைவாயில் திறக்காததால் இது குறித்து பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கேட்டபோது, பள்ளி வளாகத்திற்குள் இருந்த மர்ம நபர்கள் பள்ளியை திறக்க முடியாது என்று கூறி உள்ளனர். மேலும் பள்ளி வளாகத்திற்குள் காலி மது பாட்டில்கள் இருந்தது இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அந்த பள்ளியின் நுழைவாயில் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இதில் இந்த பள்ளி செயல்பட்டு வரும் நிலத்தின் உரிமையாளரிடம் பள்ளி நிர்வாகம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து உள்ளதாகவும் தற்போது இந்த நிலத்தில் மருத்துவமனை கட்ட போவதாகவும், எனவே, பள்ளியை காலி செய்து தருமாறும் கேட்டுள்ளார்.
இதனால்
அவரது ஆதரவாளர்களை பள்ளி வளாகத்திற்குள் இரவு அனுப்பி அந்த வளாகத்தை அவர்களது
கட்டுப்பாட்டில் வைத்திருந்து
தெரியவந்தது.போலீசார்
பேச்சுவார்த்தையையடுத்து, நில உரிமையாளர்களின் ஆதரவாளர்கள் அங்கிருந்து
சென்றனர்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கும்படியும், இந்த பிரச்சினையை தீர்த்து சுமுகமாக பள்ளி மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவித்ததையடுத்து பெற்றோர்கள் கலைந்துச் சென்றனர்.இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இயங்கி வந்த பள்ளிக்கு திடீரென பூட்டு போடப்பட்டதால் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பிரச்சனைகள் வரும் என்பதால் தனியார் பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…
-நமது நிருபர்