Sat. Dec 21st, 2024

47 கோடியில் விந்தணுவில் பாலினம் பிரிக்கும் ஆய்வகம் | 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு


47 கோடியில் விந்தணுவில் பாலினம் பிரிக்கும் ஆய்வகம் | 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு

ஜூலை, 9, 2019

கால்நடை பராமரிப்புத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், உதகையில்,47 கோடி செலவில்,விந்தணுவில் பாலினம் பிரிக்கும் ஆய்வகம் உட்பட  பல்வேறு திட்டங்களை,110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தார்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து , தமிழ்நாட்டிலுள்ள 20 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய பகுதிகளை கண்டறிந்து , அப்பகுதிகளிலுள்ள பெண் பயனாளிகளுக்கு 90 விழுக்காடு மானியத்தில், பயனாளிக்கு தலா 10 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் மற்றும் ஒரு வெள்ளாடு அல்லது செம்மறி ஆட்டுக் கிடா வீதம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது . இத்திட்டத்தில் , ஆடுகளை கொள்முதல் செய்தல் ,போக்குவரத்து செலவு , ஆடுகளுக்கு காப்பீடு செய்தல் ஆகியவற்றுடன் , உபகரணங்கள் , மருந்துகள் மற்றும் ஊட்டச் சத்துகளும் வழங்கப்படும் .

இத்திட்டத்தின் மூலம் , 6 ஆண்டுகளுக்குப் பிறகு நன்கு வளர்ந்த செம்மறி மற்றும் வெள்ளாடுகளை விற்பதன் மூலம் ஒரு பயனாளி , முறையே ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 1 . 80 லட்சம் முதல் 2 . 70 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்ட வழிவகை செய்யப்படுகிறது . இத்திட்டத்தின் கீழ் ஒரு ஊராட்சிக்கு 45 பயனாளிகள் வீதம் 81 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 3 , 645 பயனாளிகள் நேரடியாக பயன் அடைவதுடன் , இவர்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைவதைக் கண்டு , கிராமத்தில் உள்ள இதர பெண்களுக்கும் ஆடு வளர்ப்பின் மூலம் வருவாய் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு , அவர்களும் ஆடு வளர்ப்பில் ஈடுபட வழிவகுக்கும் . இத்திட்டம் , நடப்பாண்டில் 24 . 06 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

பொருளாதார நலிவிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க கால்நடைகளுக்கான பிரத்யேக காப்பீட்டுத் திட்டத்தை பயனாளிகளின் பங்களிப்பு மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது . நடப்பாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் , மொத்தம் 2.50 லட்சம் கால்நடை அலகுகள், 22.46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காப்பீடு செய்யப்படும் . பட்டியல் வகுப்பினர் , பழங்குடியினர் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு 70 சதவீத மானியத்துடனும் , மற்ற பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்துடனும் , மலைப் பகுதியில் உள்ள பட்டியல் வகுப்பு , பழங்குடியினர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு 80 சதவீத மானியத்துடனும் , இதர பயனாளிகளுக்கு 60 சதவீத மானியத்துடனும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் .

தமிழ்நாட்டில் தற்போது 28 கால்நடை நோய் புலனாய்வு ஆய்வகங்களும் ,  2 கோழியின நோய் ஆராய்ச்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன . உலகத் தரத்துடன் சிறந்த ஆய்வக முறைகளுடன் கூடிய ஒரு புதிய ” மத்திய கால்நடை நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகம் ” ( Central Animal Disease Diagnostic and Surveillance ) காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தோற்றுவிக்கப்படும் . இந்த ஆய்வகத்தில் , மத்திய நோய் ஆய்வுக் கூடம் , ஏற்றுமதிக்கான கால்நடை உற்பத்திப் பொருட்கள் ஆய்வுக்கூடம் , கால்நடைமருத்துவர்களுக்கான தங்கும் வசதியுடன் கூடிய தொழில்நுட்ப பயிற்சிக்கூடம் முதலிய வசதிகள் ஏற்படுத்தப்படும் .

சிறந்த கால்நடை மருத்துவ சேவையை வழங்குவதற்கு , அனைத்து வசதிகளுடன் கூடிய உட்கட்டமைப்பு அவசியமாகும் . அந்த வகையில் , புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 100 கால்நடை மருந்தகங்களுக்கு அறைகலன்களுடன் கூடிய புதிய கட்டடங்கள் தலா 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் , மொத்தம் 37 கோடி ரூபாய் செலவில் நடப்பாண்டில் கட்டித் தரப்படும் .

பால் உற்பத்தி பெருக , காளை கன்றுகளை விட கிடேரி கன்றுகள் பிறப்பதையே விவசாயிகள் அதிகம் விரும்புகிறார்கள் . இதனை கருத்தில் கொண்டு , உதகமண்டலம் மாவட்ட கால்நடைப் பண்ணையில் செயல்பட்டு வரும் விந்து உற்பத்தி நிலையத்தில் , விந்தணுவில் பாலினம் பிரிக்கும் ஆய்வகம் 47.50 கோடி ரூபாய் செலவில் நடப்பாண்டில் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு 110 விதியின் கீழ்,முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

நமது நிருபர்