Sat. Dec 21st, 2024

பூட்டிய வீடுகளில் கொள்ளை | ஆட்டோ கொள்ளையன் கைது |

ஜூலை 7-2019

சென்னை வளசரவாக்கம் பகுதியில் பூட்டிய வீடுகளில் நகைகள் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றின் மேலாளராக பணியாற்றி வரும் ரீகன் என்பவரது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 30 சவரன் நகைகள் கொள்ளை போனது.

அதன் பேரில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளை சம்பந்தமாக, ஏதேனும் துப்பு கிடைக்கலாம் என அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது. ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

இதேபோன்ற கொள்ளை சம்பவம் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதால் காவல்துறையினர் தனிப்படை அமைத்து ஆட்டோ கொள்ளையனை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை வளசரவாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த பணத்தில் புதிதாக ஒரு ஆட்டோவை வாங்கியதாகவும், பகல் நேரங்களில் வேலைக்குச் சென்றவர்களின் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து 36 சவரன் நகைகள் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்…

நமது நிருபர்