பெட்ரோல் பங்கில் கொள்ளை அடித்த ஐந்து இளைஞர்கள் | 4 மணி நேரத்தில் கைது
பெட்ரோல் பங்கில் கொள்ளை அடித்த ஐந்து இளைஞர்கள் | 4 மணி நேரத்தில் கைது
ஜூலை, 4, 2019
பெட்ரோல் பங்கில், இரண்டு லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்த ஐந்து இளைஞர்களை,நான்கு மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்ததோடு,பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் அருகே, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில், இன்று அதிகாலை, அதே பகுதியைச் சேர்ந்த, 5 இளைஞர்கள், இருசக்கர வாகனத்தில்,பெட்ரோல் போட வந்துள்ளனர். அப்போது, பங்கில் ஒருவர் மட்டுமே பணியில் இருந்துள்ளதால்,வசூலாகும் பணம் இருக்கும் மேசையை பூட்டி வைத்துவிட்டு,பெட்ரோல் போட்டுள்ளார். இந்நிலையில்,ஐந்து பேரில் ஒருவர் மட்டும்,பின் பக்கமாக சென்று மேசையிலிருந்த ரொக்கப்பணம் 2 லட்சத்து 35 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு,கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியுள்ளார். இந்தத் திருட்டு குறித்து,பெட்ரோல் பங்க் உரிமையாளர், காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெய்சந்திரன் உத்தரவின்படி, ஆய்வாளர் மகாதேவன், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் ஆகியோர் தலைமையில் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைக்கப்பட்டது.
பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்த நிலையில்,சம்பவ இடத்தில் குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு, அவர்கள் ஐந்து பேரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
சம்பவத்தை அடுத்து,போலீசாரின் விரைவான நடவடிக்கை காரணத்தினால்,சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இருசக்கர வாகனத்தில் காரைக்கால் சென்று அங்குள்ள இரு நண்பர்களின் உதவியோடு தலைமறைவானது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து,காரைக்காலை அடுத்த,கருவக்காட்டு பகுதியில் மறைந்திருந்த 5 இளைஞர்களையும் கண்டறிந்த போலீசார், கைது செய்ய சென்ற போது,தப்பி ஓட முயன்றனர்.
அப்போது,அவர்களை துரத்திப் பிடித்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டதில்,அவர்கள்,நந்தகோபாலன், பாலு, அரவிந்த், விக்னேஷ்,மற்றும் பிரகாஷ் என்பது தெரிய வந்தது. சம்பவத்திற்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் உட்பட, திருடப்பட்ட இரண்டு லட்சம் ரூபாயையும் காவல் துறையினர் பறிமுதல் செய்ததோடு அவர்களை சிறையில் அடைத்தனர்.
நிருபர் – ராம்