Sun. Oct 6th, 2024

வெல்ஃபேர் கட்சியின் சார்பில் | ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள் |

ஜூன், 05-2019..,

ஈகைத் திருநாளை சிறப்புடன் கொண்டாடவிருக்கும் தமிழக முஸ்லிம்கள் அனைவருக்கும் வெல்ஃபேர் கட்சியின் தமிழக நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ரமலான் மாதம் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளோடு கூடிய விரதத்தை கடைபிடித்து ஷவ்வாலின் முதல் நாளன்று ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாளை உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் சீரும் சிறப்போடும் கொண்டாடி வருகிறார்கள்.

ஒரு மாத கால விரதத்தின் ஊடாக பல நல்ல விஷயங்கள் உலகுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக தீமைகள் உடன் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்பதையும் தன்னை தானே முழுமையாக கட்டுப்படுத்துவதில் தான் மனித வெற்றி அடங்கி இருக்கிறது என்பதையும் இந்த நாட்கள் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

இந்த நாட்களில் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களை அழைத்து இஃப்தார் விருந்து தருவதும், முஸ்லிம்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்வதும் என மிகப்பெரிய சமூக நல்லிணக்க திருவிழாவாகவே ரமலானுடைய நாட்கள் கடந்து சென்றிருக்கிறது. தற்போதைய சூழலில் இந்த சமூக நல்லிணக்கமும் நெருக்கமும் சகோதரத்துவ உணர்வுகளும் மென்மேலும் அதிகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

பண்டிகைகள் என்பது ஒவ்வொரு நோக்கத்தின் அடிப்படையில் கொண்டாடக் கூடிய நிகழ்வுகள். அந்த பண்டிகைகள் ஊடாக ஒருவரை ஒருவர் நெருக்கமாக அறிந்து கொள்வதற்கும் நல்லுறவுகளை பேணுவதற்கும் அனைவரும் முன்வர வேண்டும்.

நோன்புடைய காலகட்டத்திலே எல்லா தவறுகளிலிருந்தும் எப்படி விலகி நடக்க முடிந்ததோ அதைப்போலவே வரக்கூடிய நாட்களிலும் தவறுகளுக்கு பின்னாலே பயணப்படாத ஒரு நிலைப்பாட்டை முஸ்லிம்களின் எடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அரசியல் களத்தில் நல்லவர்களோடு இணைந்தும் நல்லவர் கரங்களை வலுப்படுத்தவும் வேண்டும்.

ஈகை திருநாளின் எல்லா வளங்களும் நலங்களும் எல்லோருக்கும் கிடைக்கப் பெறுவதாகட்டும். இந்த நாளின் மகிழ்ச்சி வருடம் முழுவதும் சிறப்பாக இருப்பதற்கு வெல்ஃபேர் கட்சியின் சார்பாக மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்

கே.எஸ்.அப்துல் ரஹ்மான், மாநிலப் பொதுச்செயலாளர், வெல்பேர் கட்சி, தமிழ்நாடு.