குடிநீர் சரியாக கிடைக்கவில்லை என | திடீர் சாலை மறியல் |

மே, 17-2019
திருத்தணி அருகே முறையாக குடிநீர் வழங்காததால்… பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு சிக்கல். நீண்ட தூரம் சென்று குடிநீர் பிடித்து வர வேண்டிய சூழ்நிலை இருப்பதால், முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கோதண்டராமபுரம் கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்பங்களில் அனைவரும் விவசாயமும் விவசாயக் கூலி வேலையும் செய்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான வீடுகளில் பால் உற்பத்திக்காகவும் விவசாய நிலத்தில் தோட்டப் பயிர்களுக்கு பயன்படுத்த மாடுகளை பயன்படுத்தி வருகின்றனர் . மேலும் ஆடுகள் தங்கள் செல்லப்பிராணிகளாக வளர்கின்றனர். இதனால் இவர்களுக்கு தேவையான குடிநீர் ஊராட்சி நிர்வாகம் மூலம் கடந்த சில நாட்களாக வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கால்நடைகளும் பொதுமக்களும் தங்கள் அன்றாட தேவைகளுக்காக குடிநீருக்கு பல மைல் தூரம் சென்று எடுத்துவர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காததால்… ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஆண் பெண் அனைவரும் திருத்தணி நாகலாபுரம் சாலையில் உள்ள பூனி மாங்காடு துணைமின் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனால் திருத்தணியில் இருந்து நல்லாட்டூர் நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு போக்குவரத்து தடைபட்டது . இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி வட்டாட்சியர் செங்கல்லால் மற்றும் கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக டிராக்டர் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
நமது நிருபர்