இயக்குநர் சற்குணத்திற்கு கொலை மிரட்டல் | களவாணி 2 வெளிவருமா..?|
மே, 10-2019..,
சென்னை – இயக்குநர் சற்குணம் புகார்
தனது திரைப்படத்தை வெளியிட விடாமல், தயாரிப்பாளர்கள் சிலர் கொலைமிரட்டல் விடுப்பதாக.. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் சற்குணம் புகார் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் களவாணி. இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் 2 ஆம் பாகம் சற்குணம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் தயாராகி வெளியாக இருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் கமரான் மற்றும் சிங்காரவேலன் ஆகியோரால் நீதிமன்றத்தில் இந்த திரைப்பட வெளியீடுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் களவாணி 2 திரைப்பட வினியோக உரிமை தங்களிடம் உள்ளதாகவும் எனவே இந்த திரைப்படத்தை சற்குணம் தரப்பில் வெளியிட தடை விதிக்கவேண்டும் எனவும் தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், கமரான் தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இயக்குநர் சற்குணம், படத்தின் வினியோக உரிமையை தான் யாருக்கும் கொடுக்கவில்லை எனவும், படத்தின் முழு உரிமையும் இப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான தன்னிடமே உள்ளது எனவும் நீதிமன்றத்தில் அவர் தரப்பு வாதன் மூலம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
இதனால் களவாணி 2 படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் தனது படத்தை வெளியிட விடாமல் தயாரிப்பாளர்கள் சிங்காரவேலனும், கமரானும் தன்னை தடுப்பதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும்… இயக்குநர் சற்குணம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், கமரான் ஆகியோருக்கும் களவாணி 2 படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் இந்த படத்தின் கதாநாயகன் விமலுடன் ஏற்பட்ட சில முன்விரோதம் காரணமாகவே தனது படத்தை வெளியிட விடாமல்.. அவர்கள் தன்னை தடுத்தும் மிரட்டியும் வருவதாக தெரிவித்தார். மேலும், சிங்காரவேலன் தன்னை சில ரௌடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாலும், தனது படத்தை வெளியிட விடாமல் தடுப்பதாலும் அவர்கள் இருவர் மீதும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், காவல்துறையினர் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
(பேட்டி – களவாணி 2 திரைப்பட இயக்குநர் சற்குணம்)