Sat. Dec 21st, 2024

அத்துமீறிய காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் | சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் |

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகும் மாநிலமாக மாறிவருகிறது தமிழகம் . அரசியல்வாதிகள், காவல்துறையினர், சமுக விரோதிகள் என பலத்தரப்பட்டரின் தாக்குதலில் தத்தளிக்கின்றனர் பத்திரிகையாளர்கள் நேரடி தாக்குதல், செய்தி சேகரிக்கும் கடமையை செய்யவிடாமல் தடுத்தல் , மிரட்டுதல், இணையவழி தாக்குதல் என பலப்பல இன்னல்களை தினந்தோறும் பத்திரிகையாளர்கள் சந்தித்து வருகின்றனர். பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் முறையான புகாரளித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்காததே இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணம். இந்த நிலையில் இன்று (06-05-2019) திங்கட்கிழமை மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக முதல்வர் வந்த போது, செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் நியூஸ் 18 குழுவினர்.
சிந்தாமணி சந்திப்பில் முதல்வரின் பிரச்சாரம் முடியும் நிலையில்,அடுத்த இடமான வலையங்குளம் செல்ல முயன்ற நியூஸ் 18 குழுவினரின் வாகனத்தை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வந்த போது, அனைத்து வாகனங்களையும் போக்குவரத்து போலீசார் மறித்தனர்.

போலீசாரின் பணி கருதி, அடுத்து நகராமல் அங்கேயே வாகனத்துடன் செய்தி குழுவினர் நின்றனர், அந்த வழியில் வரும் முதல்வர் பிரசாரக் காட்சியை எடுக்க திட்டமிட்ட நியூஸ் 18 ஒளிப்பதிவாளர் ராம்குமார் கேமராவை எடுத்து சாலைக்கு வந்த போது, அவரை செய்தி சேகரிக்கவிடாமல் தடுத்திருக்கிறார் கீரைத்துறை ஆய்வாளர் டேவிட் ரவிராஜன். மேலும் ஒளிப்பதிவாளரை கேமரா உடன் தள்ளிக்கொண்டு ஒளிப்பதிவை நிறுத்தச் சொல்லி கடுமையாக மிரட்டியுள்ளார்.

முதல்வரின் பிரச்சாரத்தை செய்தி சேகரிக்கவே ஒளிப்பதிவு என்று விளக்கம் சொன்ன நிருபர் ஸ்டாலினிடமும் முறை தவறி நடந்து கொண்ட ஆய்வாளர் டேவிட்ரவிராஜன் காவலர் உதவியுடன் சிறைபிடித்ததுடன் அந்த இடத்தில் இருந்து நகர முயன்ற ஒளிப்பதிவாளரை சட்டையுடன் பிடித்து இழுத்ததில் அவரது நேரலை பிஎன்சி கேபிள் அறுந்துள்ளது. நிலைமை மோசமாவதை உணர்ந்த செய்தியாளர் காவல்துறை அதிகாரிகள் கவனத்துக்கு செல்போனில் தகவல் கொடுத்து இருக்கிறார் அவர்களும் சம்மந்தப்பட்ட ஆய்வாளரை தொடர்பு கொண்டு பத்திரிகையாளர்களை விடுவிக்க கூறியபிறகும் தன்னிலை தவறிய ஆய்வாளர், “நான் கூறிய பின் கேமராவை ஏன் இயக்கினாய்? நெல்லையில் இப்படி தான் செய்தியாளர்களை கதற வைத்தேன்.4 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள், என்னை எதுவும் செய்ய முடியவில்லை. இப்போதும் எதுவும் செய்ய முடியாது.” என அதிகார போதை தலைக்கேறிய நிலையில் ஆத்திரத்தை கொட்டியிருக்கிறார் தொடர்ந்து உங்களை கைது செய்திருக்கிறேன் என்று பத்திரிகையாளர்களை மிரட்டி இருக்கிறார் ஆய்வாளர் டேவிட் ரவிராஜன். இந்த அத்துமீறல் சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.தேர்தல் அதிகாரியாக பொறுப்பு வகிக்கும் மதுரை மாவட்ட ஆட்சியரும், மாநகர காவல் ஆணையரும் உடனடியாக காவல் ஆய்வாளர் டேவிட் ரவிராஜன் மீது வழக்கு பதிவு செய்து பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது .

பாரதிதமிழன்

இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்