7 பிள்ளைகள் இருந்தும் இறந்தவர் உடலை அடக்கம் செய்த பெண் SI.
மே,04-2019..,
மனைவி 7 பிள்ளைகள் இருந்தும் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய உதவிக்கரம் நீட்டிய பெண் எஸ்.ஐ.
மனைவி மற்றும் 7 பிள்ளைகள் இருந்தும் இறந்த தந்தையின் உடலை வாங்க மறுத்து ஓட்டம் பிடித்தனர் ஆனால் அவரின் அடக்கத்துக்கு தானாக முன்வந்து உதவிய பெண் எஸ்ஐ.யின் இரக்க குணத்தை பலர் பாராட்டினர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காமராஜர்புரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் சித்திரைபாண்டி /54 உப்பாளை தொழிலாளி இவரது மனைவி தங்க ரத்தினம்/49. இவர் வீடுகளுக்கு சென்று வேலை பார்த்து வந்தார் இவர்களுக்கு 4
மகன்கள் 3 மகள்கள். ஒரு மகனுக்கு மட்டும் திருமணமாகி உள்ளது.
உப்பாளை தொழில் பார்த்து வந்த சித்திரை பாண்டிக்கு சில ஆண்டுகளுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்டது நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகமானதால் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை என இரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சித்திரை பாண்டியை காச நோய் தாக்கியிருப்பதை கண்டறிந்தனர். அதற்காக அவருக்கு தீவிர சிகிச்சையும் கொடுத்து வந்தனர். நோய் பாதிப்புக்குள்ளான அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வீட்டிற்கும் ஒழுங்காக செல்லாமல் பாதிநாள் உறவினர் வீடு மீதி நாள் மருத்துவமனை என கழித்து வந்தார் இந்நிலையில் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டிருந்தது இதற்கிடையில் 10 நாட்களுக்கு முன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தங்கியிருந்த சித்திரைபாண்டி அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறியிருக்கிறார். வந்தவர் வீட்டிற்கு செல்லாமல் ஏப்.29ம்தேதி ஆறுமுகநேரியில் உள்ள பூங்காவிற்கு சென்றுள்ளார். அன்றிரவு அங்கேயே தங்கிவிட்டார். மறுநாள் 30ம்தேதி அங்குள்ள இரும்பு பெஞ்ச் ஒன்றியில் உட்கார்ந்து நிலையில் இறந்து கிடந்தார் இதை கண்டவர்கள் ஆறுமுகநேரி போலீசிற்கு தகவல் தெரிவித்தனர் இன்ஸ்பெக்டர் அந்த பூங்காவிற்கு சென்று சித்திரைப்பாண்டி உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அவரது மனைவியை போலீஸ் நிலையம் வரும்படி தகவல் கொடுத்தார் சிறிது நேரத்தில் தங்கரத்தினம் போலீஸ் நிலையம் வந்தார் அவரிடம் கணவர் பற்றிய விவரங்களை கேட்டனர் பூங்காவில் இறந்தது தனது கணவர்தான் என உறுதிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து அதற்குரிய படிவத்தில் தங்கரத்தினத்திடம் கையெழுத்து வாங்கிகொண்டு உங்க புருஷன் உடல் காயல்பட்டினம் மருத்துவமனையில் உள்ளது போய் வாங்கி முறைப்படி அடக்கம் செய்யுங்கள் என்று போலீசார் கூறினார் ஆனால் தங்கரத்தினம் அவரை அடக்கம் செய்ய என்னிடம் பண வசதியில்லை நீங்களே அதை செய்து விடுங்கள் என்ற அலட்சியமாக கூறினார் ஆனால் போலீசார் அவர்கள் பாணியில் எச்சரித்தபின் சரி என தலையாட்டிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தார் சுமார் ஒரு மணி நேரம் இருக்கும் சித்திரைபாண்டி உடல் பரிசோதனை அறிக்கை வாங்க காயல்பட்டினம் மருத்துவமனையில் இருந்த பெண் எஸ்ஐ சரண்யா,ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்திற்கு போன் செய்தார். சித்திரபாண்டி உடலை வாங்க இதுவரை யாரும் வரவில்லை என்று கூறவே அப்போது தான் தெரியவந்தது அவரது மனைவி தங்கரத்தினம் காயல்பட்டினம் செல்லவில்லை என்று இதனால் அதிர்ந்த போலீசார் அங்கிருந்து ஒரு ஆட்டோவை தங்கரத்தினம் வீட்டிற்கு அனுப்பினர் அவரை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றினர் அவருடன் 2வது மகனும் ஏறிக்கொண்டார். ஆட்டோ காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சென்றது அங்கு எஸ்ஐ சரண்யா, பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் ஆகியோர் படிவத்தில் கையெழுத்து போட்டுவிட்டு உடலை வாங்கி செல்லுங்கள் என்று கூறினார் ஆனால் தங்கரத்தினம் என்னிடம் காசு இல்லை. நீங்களே அவர் உடலை எங்கேயாவது புதைத்து விடுங்கள் என்று நெஞ்சில் ஈரமில்லாமல் பேசினார்.
ஏம்மா… இது உங்களுக்கே நல்லா இருக்கா…? ஊர் பெயர் தெரியாத அனாதை பிணம் என்றால் போலீசாரே அடக்கம் செய்து விடுவார்கள். ஆனால் இதை அப்படி செய்ய முடியாது. பேசாமல் கையெழுத்து போட்டு வாங்கி செல்லுங்கள் என்று அவர்கள் தங்கரத்தினத்திற்கு எடுத்து கூறினர். ஆனால் அவர் அசைவதாக இல்லை. காசு இல்லை என்ற பாட்டையே பாடிக்கொண்டிருந்தார். உடனே எஸ்.ஐ. சரண்யா, ஏம்மா உங்களுக்கு பணம்தானே பிரச்சனை அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதுடன் அவரது ஊரைச்சேர்ந்த சில இளைஞர்களை மருத்துவமனைக்கு வரவழைத்தார் 10 பேர் அங்கு வந்தனர். இவர் உடலை அடக்கம் செய்ய எவ்வளவு செலவாகும்? என எஸ்ஐ சரண்யா கேட்டார். அதற்கு அவர்கள், சிம்பிளாக செய்தாலும் மூவாயிரம் ரூபாய் ஆகும் என்றனர். சரி… நானே அந்த பணத்தை தருகிறேன் என்று கூறியதோடு எஸ்ஐ சரண்யா தான் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை அந்த இளைஞர்களிடம் கொடுத்தார். அதோடு அவர் நிற்கவில்லை இரக்கப்பட்டு அங்குள்ள கடையில் ரூ.200 மதிப்புள்ள பூமாலை வாங்கி வரச்சொல்லி, அதை தங்கரத்தினத்திடம் கொடுத்தார் என்ன இருந்தாலும் அவர் உங்கள் கணவர் அவரை வெறும் கழுத்தோடு அனுப்பக்கூடாது இந்த மாலையையாவது போடுங்கள் அப்போதான் அவரது ஆத்மா சாந்தியடையும் என்று சித்திரைபாண்டி உடலுக்கு மனைவியால் மாலை அணிவிக்கச் செய்தார் இதைத்தொடர்ந்து லோடு ஆட்டோவில் அவர் ஏற்றி செல்லப்பட்டு சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், உடல் அடக்கத்தில் பெத்த பிள்ளைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. தாயும், மகனும் பங்கேற்காமல் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள்…
நமது நிருபர்