Mon. Oct 7th, 2024

நூற்றாண்டு கண்ட நீதிமன்றத்திற்கு அஞ்சல் தலை (ம) அஞ்சல் உறை வெளியிட கோரிக்கை…

நூற்றாண்டு (1919-2019)கண்ட திருச்சி நீதிமன்ற கட்டிட பாரம்பரியத்தை போற்றும் வகையில் நினைவார்த்த அஞ்சல் தலை மற்றும் முதல் நாள் அஞ்சல் உறை,
வெளியிட கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, கன்டோன்மென்ட் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. நீதிமன்றமானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு நூறு ஆண்டுகள்(1919-2019) ஆகியுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழக்கூடிய அனைத்து வகையான குற்றங்களை விசாரிப்பதற்காக 1804 ஆம் ஆண்டு வால்டர் கால்பீல்டு லேன்னன் என்பவரால் புத்தூர் பகுதியில் குற்றவியல் நீதிமன்றம் கட்டப்பட்டது. தற்போது அப்பகுதி பிஷப் ஹுபர் மேல்நிலைப்பள்ளி வளாகமாக உள்ளது. அதன்பின் ,திருச்சி நீதிமன்றத்துக்கு என தனியாக வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு கன்டோன்மென்ட் பகுதியில் பல ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அன்றைய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜே.ஜி.பர்ன் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கிலாந்து அரசின் பாரம்பரிய கட்டிட வடிவமைப்புடன் தாத்தாபிள்ளை என்ற ஒப்பந்தக்காரர் மூலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்ட இரும்பு உத்திரங்கள், தூண்கள் மூலம் கட்டிடத்தின் மேற்கூரைகள் அமைக்கப்பட்டன. மேலும், தரைத்தளத்திலிருந்து முதல் தளத்திற்கு செல்ல மரப்பலகைகளால் ஆன இருபுற படிக்கட்டுகள் ஏற்படுத்தப்பட்டன. இக்கட்டிடத்தை 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி நீதிபதி ஜே.ஜி.பர்ன் திறந்து வைத்தார். திருச்சி மட்டுமின்றி அரியலூர் ,கரூர் உட்பட அப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த பகுதிகளின் வழக்குகள் இங்கு விசாரிக்கப்பட்டன. அதன்பின் இடநெருக்கடியை தவிர்ப்பதற்காக குற்றவியல் நீதிமன்றங்கள், குடிமையியல் நீதிமன்றங்கள் விரைவு நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றம் என வளாகத்தினுள் தனித்தனியாக கட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து அனைத்து நீதிமன்றங்களையும் கொண்டு புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டது .எனினும் பாரம்பரியமிக்க பழமையான கட்டிடத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தற்போது வரை தொடர்ந்து இயங்கி வருகிறது. பாரம்பரியமிக்க இக்கட்டிடம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி நூறு ஆண்டை கடக்க உள்ளது. இந்திய அஞ்சல் துறை பல்வேறு நீதிமன்றங்களின் வெள்ளி விழா ,பொன் விழா, நூற்றாண்டு விழா என பல்வேறு நிகழ்வுகளுக்கு நினைவு அஞ்சல் தலையும், முதல்நாள் உறையும் வெளியிட்டுள்ளது. அவ்வகையில்,
நூற்றாண்டு கண்ட திருச்சி நீதிமன்ற கட்டிட வளாகத்திற்கு அதன் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் அஞ்சல் துறை சார்பில் நினைவு அஞ்சல் தலை மற்றும் முதல் நாள் அஞ்சல் உறை வெளியிட வேண்டும் என வழக்கறிஞர் சித்ரா மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு தனி அலுவலரிடமும் மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளார் . அஞ்சல் துறையினர்
கல்கத்தா உயர் நீதிமன்றம் நூற்றாண்டு விழா (1862-1962)
1-7-62 அன்று நினைவார்த்த அஞ்சல் தலை மற்றும் முதல் நாள் உறை,
மெட்ராஸ் உயர்நீதி மன்ற நூற்றாண்டு விழா (1862-1962)
6-8-62 அன்று நினைத்த அஞ்சல்தலை மற்றும் முதல் நாள் உறை,
பாம்பே உயர் நீதிமன்ற நூற்றாண்டு விழா (1862-1962)
14-8-62 அன்று நினைவாக தபால் தலை மற்றும் முதல் நாள் உறை ,
கல்கத்தா Bankshall நீதிமன்றம் வெள்ளி விழா ஆண்டு(26-9-1975) அஞ்சல் உறை,
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற பொன்விழா (29-5-1976)

  • செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற நூற்றாண்டு விழா அஞ்சல் உறை (1880-1980) என வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஜயகுமார்