மதப்பிரச்சாரம் செய்த ஐஏஎஸ் | பணியில் இருந்து நீக்கம் |
மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பார்வையாளராக பணியிலிருந்த உமாசங்கர் ஐஏஎஸ் மதப்பிரச்சாரம் செய்ததால் அப்பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பார்வையாளராக தமிழ்நாட்டு ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் நியமிக்கப்பட்டார். அவர் மத்திய பிரதேசத்தின் சித்தி மக்களவை தொகுதியில் தேர்தல் பார்வையாளராக பணியாற்றினார். அப்போது அவர் சித்தி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக சென்றார். அந்த மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு அவர் மத போதனை செய்துள்ளார். அந்த மருத்துவமனை அதிகாரிகள் உமாசங்கரிடம் இந்த மாதிரி செய்யாமல் ஓய்வு எடுக்கும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது மேலும் உமாசங்கர் தான் தங்கியிருந்த இடத்திலும் இதே போன்ற மதபிரசாரம் செய்ததாக புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி காந்தா ராவ் உமாசங்கரை தேர்தல் பார்வையாளர் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து காந்தா ராவ், கூறுகையில் உமா சங்கர் தங்கியிருந்த இடத்தில் மத பிரசாரம் செய்ததாக புகார்கள் வந்தன. அதுகுறித்து விசாரித்த பிறகு அதன் அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் சித்தி தொகுதி தேர்தல் பார்வையாளர் பொறுப்பில் உமா சங்கர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் ஹிமாச்சல பிரதேச ஐஏஎஸ் அதிகாரியான சந்தராகர் பாரதி நியமிக்கப்பட்டுள்ளார். எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே 2015ஆம் ஆண்டு உமா சங்கர் ஐஏஎஸ் பொது இடங்களில் மதபிரசாரம் செய்ததது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு உமா சங்கரை கடுமையாக கண்டித்தது. அத்துடன் இதேபோன்று அவர் தொடர்ந்து செய்தால் சட்டரிதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது…