Sat. Dec 21st, 2024

இட பிரச்சனையால் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டதா? | மின் கசிவால் தீ விபத்தா.? |

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் கிடங்கில் நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள லேக் ஏரியாவில் நடனம் ஆர்ட்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் குடோன் அமைந்துள்ளது. இதன் உரிமையாளரான நடராஜன் மறைந்து விட்டதால், அவரது மனைவி ராஜலட்சுமி என்பவர் தற்போது இதன் பொறுப்பை நிர்வகித்து வருகிறார். இந்த குடோன் உரிமை குறித்து கடந்த சில வருடங்களாக பிரச்சனை நீடித்து வருகிறது. இதனை சுரேஷ் என்பவர் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி முழுவதும் உடனடியாக மின்சாரம் தடை செய்யப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்
4 மணி போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.கொழுந்து விட்டு எரிந்த தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தீப்பற்றி எரிந்த சமயத்தில் குடோனை கவனித்து வந்த சுரேஷ் இல்லை என தெரியவந்தது அவரது எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


இட பிரச்சனையால் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டதா? அல்லது மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? என்கின்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

நமது நிருபர்