அண்ணாநகர் டவர் பூங்காவில் | செயின், செல்போன்கள் ஜாக்கிரதை |
தஞ்சாவூரை சேர்ந்தவர் ஆகாஷ் (17). இவரது நண்பர்கள் ராஜசிதம்பரம் (17), பிரசாந்த் (17). ஆகிய மூன்று பேரும் 12ம் வகுப்பு முடித்து விட்டு கடந்த சில மாதங்களாக அண்ணா நகர் டவர் பூங்கா அருகே உள்ள விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 8 மார்ச் அன்று, இரவு 7:30 மணி அளவில் வகுப்பு முடிந்து பூங்காவிற்கு வந்த மாணவர்கள் மூன்று பேரும் தங்களது பையை வைத்து விட்டு விளையாடிக்கொண்டு இருந்தனர். பின்னர் அறைக்கு செல்ல வந்து பையை எடுத்தபோது அவர்களின் பையில் வைத்திருந்த விலை உயர்ந்த 3 பேரின் செல்போன்கள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து இன்று மதியம் 12:30 மணி அளவில் அண்ணாநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அண்ணா நகர் டவர் பூங்காவில் தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இங்கு நடைபெறும் செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் சார்பில் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டது.
ஆனால் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும் இடம் என்று தெரிந்தே போலீசாருக்கு சவால் விடும் வகையில் தற்போது மீண்டும் திருட்டு சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இந்த அண்ணாநகர் டவர் பார்க்கில் மூன்று மாணவர்களின் செல்போன்கள் திருடு போன சம்பவம் அங்கு நடைபயிற்சி செய்ய வரும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…
நமது நிருபர்