அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் | குழந்தை கீழே விழுந்து பலி |
சென்னை, நெற்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் ஒன்றை வயது குழந்தை பலி..
நெற்குன்றத்தில் உள்ள மெட்ரோ ரயில் குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேசன் (28). இவரது மனைவி அருள்மொழி (23). இவர்களுக்கு திருமணமாகி வானியா என்ற 1 வயது 8 மாதமே ஆன பெண் குழந்தை உள்ளது.
இருவரும் கோயம்பேட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிலைய அலுவலகத்தில் வேலை செய்து வருவதால் தினமும் குழந்தையை தங்களுடன் அழைத்துக்கொண்டு அலுவலக வளாகத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் இடத்தில் விட்டு வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது குழந்தையை தங்களுடன் அழைத்து வருவது வழக்கம்..
இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் குழந்தையை மோட்டார் சைக்கிளின் முன்னால் அமர வைத்து கொண்டு வெங்கடேசன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின்னால் அவரது மனைவி அமர்ந்து கொண்டிருந்தார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெற்குன்றம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இடித்ததில் வெங்கடேசன் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.
இதில் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை வானியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்..
சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் அழகு குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்…
நமது நிருபர்