Mon. Oct 7th, 2024

பலரை காவு வாங்கிய காவி அரசு | வெல்ஃபேர் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு |

வெல்ஃபேர் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு

ஜனநாயக இந்தியாவை பொருத்தமட்டில் நடைபெறவுள்ள 2019 நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமானதாகும். கடந்த ஐந்து வருடங்களாக ஆண்டு கொண்டிருக்கும் மோடி அரசு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளையே தகர்த்தெறிவதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. மோடி மற்றும் சங்பரிவார் கும்பலின் அடியாட்கள் நாடு முழுவதும் வெறுப்பையும் இன வேஷத்தையும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்களையும் தலித்துகளையும் கும்பல்கள் என்ற போலிப் போர்வையில் தெருக்களில் அடித்துக்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகரீதியில் தங்களது எதிர்ப்புகளை, மாற்றுக்கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடிய வர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்துகிறார்கள். அவர்களை படுகொலைகள் செய்து கொண்டிருக்கின்றார்கள். கௌரி லங்கேஷ், கல்புர்கி, பெஹ்லுகான், பன்சாரே, ஜுனைத் என பலரையும் காவு வாங்கியிருக்கிறது காவிக்கூட்டம். பல்கலைக் கழகங்களில் ஆக்கப்பூர்வமான முறையில் மாணவர்கள் தெரிவிக்கும் எதிர்ப்புக்களைக் கூட கொடூரமான முறையில் ஒடுக்குகிறது பாஜக அரசு.

அமைப்புச் சட்ட நிறுவனங்களான ரிசர்வ் வங்கி, வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம், நீதிமன்றம் முதல்.. ஏன் தேர்தல் ஆணையம் வரை தங்களது கட்டுப்பாட்டில் வைப்பதற்கான சகலவித தந்திரங்களையும் சங்பரிவார் செய்து கொண்டிருக்கிறது. ஆதிவாசிகள், தலித், முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை ஆளும் கட்சியின் தலைவர்களே மேற்கொண்டு வருகிறார்கள்.

நாட்டில் ஊழலும் கார்ப்பரேட் மயமாக்கலும் படுபயங்கரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ரபேல் ஊழல் போன்ற பிரதமருக்கே நேரடியாக பங்கு இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்ட கூடிய ஊழல் நிகழ்வுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது, நாடு மிகப்பெரிய கடன் வலையில் சிக்கி இருக்கிறது. 2018 இல் நாட்டின் கடன் சுமை 527 பில்லியன் டாலராக (ரூ.36,46,06,72,06,388.00) அதிகரித்திருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எனும் முட்டாள்தனமான செயல்பாடு நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாக சிதைத்து விட்டது. ஜிஎஸ்டி மாநிலங்களின் பொருளாதார அதிகாரத்தை பறித்திருக்கிறது. இரண்டு கோடிக்கும் அதிகமான வேலை இழப்புகள் உருவாக்கியிருக்கிறது. கடன் தொல்லை தாங்காமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் சொத்துக்களும் செல்வங்களும் மட்டும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மீண்டும் ஒரு முறை பாஜக ஆட்சிக்கு வருமானால் 2019ல் நடைபெறும் தேர்தலே இந்த தேசத்தின் இறுதி தேர்தலாக இருக்கும் என்ற அறிகுறியைத்தான் பாஜக தலைவர்களான அமித்ஷா, சாக்சி மகாராஜ் போன்றோரின் பேச்சுக்கள் வெளிப்படுத்துகிறது.

இந்த சூழலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதுதான் நாட்டில் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகளின் ஒட்டுமொத்த விருப்பமாக இருக்கிறது. இதற்காக மதச்சார்பற்ற சக்திகளின் பரந்துபட்ட கூட்டணி உருவாகியிருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாட்டில் அப்படிப்பட்ட ஒரு கூட்டணி உருவாகவில்லை. ஆனால் சில மாநிலங்களில் அப்படிப்பட்ட கூட்டணிகள் உருவாகி இருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதை விட பாஜகவை அதிகாரத்திலிருந்து அகற்றுவதுதான் முக்கியம் என வெல்ஃபேர் கட்சி தீர்மானித்தது. அதனால் தமிழ்நாட்டில் கட்சி எங்கேயும் போட்டியிடவில்லை.

தமிழகத்தில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் திமுக+ காங்கிரஸ் கூட்டணி, அதிமுக+ பாஜக கூட்டணிகள் இடையேதான் இந்த தேர்தலில் போட்டி. அதில் எடப்பாடி தலைமையிலான அதிமுக, வழக்குகளிருந்து தங்களை காப்பாற்றுவதற்காகவும் கொள்ளையடித்த சொத்துக்களை தக்க வைப்பதற்காகவும் பாரதிய ஜனதாவோடு கூட்டணி வைத்து தமிழகத்திற்கும் சேதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு முற்றிலும் சீரழிந்த தோல்வியடைந்த ஒரு அரசாக மாறிக்கொண்டிருக்கிறது.

எனவே தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று சொன்னால் இன்றைக்கு மாற்றாக காங்கிரஸ் மட்டும்தான் இருக்கிறது. தேசிய அளவில் காங்கிரஸ் தனித்தோ அல்லது கூட்டணியாகவோ அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் பாஜகவை அகற்றுவதற்கு உண்டான மிகச் சரியான தீர்வாக இருக்க முடியும். அந்த அடிப்படையில் தான் நாட்டைப் பாதுகாப்பதற்காக வேண்டி, நாட்டின் ஜனநாயக அடிப்படைகளை தக்கவைப்பதற்காக வேண்டி. நாட்தில் வாழும் சாதாரண மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அகில இந்திய அளவில் ஒரு சில தொகுதிகளை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸுக்கு வெல்ஃபேர் கட்சி ஆதரவளித்துள்ளது. அதனடிப்படையில் தமிழகத்திலும் திமுக காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெல்ஃபேர் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

நாட்டின் நலன் கருதி வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை தமிழக மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று வெல்ஃபேர் கட்சி, தமிழக நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.

வெல்ஃபேர் வாழ்த்துகளுடன்,

கே.எஸ்.அப்துல் ரஹ்மான்,
மாநிலப் பொதுச்செயலாளர்.