சென்னையில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 9,8-லட்சம் பறிமுதல் |
சென்னை திருமங்கலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பறிமுதல். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 18–ந் தேதி நடைபெறுகிறது.
இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கொண்டு செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு பறிமுதல் செய்து வருகின்றனர்.
உரிய ஆவணங்களை காட்டியபின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உரியவரிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன.
இந்தநிலையில் சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் சாந்தி காலனி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வில்லிவாக்கம் தேர்தல் அலுவலர் சங்கீதா அவர்களின் உத்தரவின் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி D.விஜயராகவன் திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் , ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் நேற்று இரவு 10:30 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள்.
அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. அதில் பயணம் செய்தவரிடம் சோதனை செய்தபோது, அவரிடம் 9 லட்சத்து 83 ஆயிரத்து 250 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில்,அவர் சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் (28) என்பவர் என்றும், அவர் சென்னை பிராட்வே பகுதியில் காய்கறிகளை இறக்கி விட்டு வந்ததாகவும் கூறினார். ஆனால் அவரிடம் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை..
நமது நிருபர்