உயர்மின் அழுத்தத்தால் எட்டு குடிசை எரிந்து சாம்பல் | வாழ்வாதாரம் இழந்த குடிசை வாசிகள்
சென்னை நுங்கம்பாக்கம் மேற்கு மாட வீதியில் நேற்று நண்பகல் முதல் மின்தடை இருந்தது. பின்னர் இரவு 8 மணியளவில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டபோது அப்பகுதியில் இருந்த குடிசை குடியிருப்புகளில் அருகருகே இரண்டு குடிசைகளில் தீப்பற்றியுள்ளது.
இதனைக்கண்டு அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால் தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பாகவே காற்றின் வேகத்தால் அடுத்தடுத்து குடிசைகளுக்கு தீ பரவி அப்பகுதியிலிருந்த 9- குடிசைகளும் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கின.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒன்றரை நேரம் போராடி குடிசைகளில் பற்றிய தீயை அணைத்தனர் தீ விபத்தின்போது குடிசைகளில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
ஆனால் 9-குடிசைகளில் இருந்த ஆடைகள், கல்விச்சான்றிதழ்கள்,
பணம், நகை உள்பட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் முழுவதுமாக நாசமாயின.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மின்சாரம் வழங்கப்பட்ட போது உயர்மின் அழுத்தம் இருந்ததே காரணம் என தெரியவந்துள்ளது.
இதனிடையே தீ விபத்தினால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு உடனடியாக அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நமது நிருபர்