தீ அனைக்கும் கருவி விற்பனையகத்தில் தீ விபத்து,??
தீ அனைக்கும் கருவி விற்பனையகத்தில் தீ விபத்து
சென்னையில் தீயணைக்கும் கருவி விற்பனையகத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 25 லட்சம் மதிப்பிலான கருவிகள் சேதமடைந்தன.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல தனியார் தீயணைப்பு கருவி விற்பனையகத்தின் கிளை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. இக்கடை பூட்டப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் கடையிலிருந்து வெடிக்கும் சத்தத்துடன் புகைமூட்டம் வெளியே வந்தது.
இதனைக் கண்டு அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக கீழ்ப்பாக்கத்தில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் தீயணைப்பு கருவிகளில் உள்ள வேதிப்பொருளின் காரணமாக வேகமாக பரவிய தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனையடுத்து வேப்பேரி, எழும்பூர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களிலிருந்து மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க கடும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. சுமார் இரண்டு
மணி நேர முடிவில் தீ அணைக்கப்பட்டது.இந்த தீ விபத்தின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனக்கருதி அருகிலிருந்த பொதுமக்கள் அனைவரையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகவும் சுமார் 25 லட்சம் மதிப்பிலான தீயணைப்பு கருவிகள் இந்த தீவிபத்தில் சேதமடைந்துள்ளதாகவும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.