சிட்டிஷன் அத்திப்பட்டியாக மாறும் ஏமானூர் கிராமம்..! | செயல்படாத துணை சுகாதார நிலையம்…!!
கொளத்தூர் அருகே காவிரி கரையோர கிராமத்தில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கொளத்தூரை அடுத்த செட்டிப்பட்டி காவிரி கரையோரத்தில் ஏமனூர் மேற்கு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 5000 மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்ட எல்லையில் இந்த கிராமம் இருந்தாலும் இந்த கிராம மக்கள் அனைத்து தேவைகளுக்கும் கொளத்தூர் வருவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் ஒருவித மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. அக்காய்சலில் ஏமானூர் கிராம மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் அக்கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர், செவிலியர் வருகை இன்றி பூட்டி கிடக்கிறது.
ஆதலால் அம்மக்கள் சிகிச்சை பெற சுமார் 25 கீ.மீ தூரமுள்ள ஏரியூர் என்ற கிராமத்தில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்கு 16. கீ.மீ தூரம் வனப்பகுதியை கடக்க வேண்டியுள்ளது.
அதை தவிர்த்து பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானால் சுமார் 35 கீ.மீ தூரம் சென்று சிகிச்சை பெற வேண்டியுள்ளது .கொளத்தூருகுக்கு வந்து சிகிச்சை பெற வேண்டுமெனில் அவர்கள் செட்டிப்பட்டி பரிசல் துறையில் காவிரி ஆற்றை கடக்கவேண்டியுள்ளது. அதிலும் 5 மணிக்கு மேல் பரிசல் போக்குவரத்தும் நிறுத்தப் படுவதால் இரவு நேரத்தில் அவசர சிகிச்சை என்பது இவர்களுக்கு எட்டா கனியாக உள்ளது.
இந்நிலையில் மர்ம காய்ச்சலால் பாதிக்க பட்டவர்கள் பரிசலின் மூலம் காவிரி ஆற்றை கடந்து சிகிச்சைக்காக கொளத்தூர் வட்டாரத்தில் உள்ள காவேரிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கொளத்தூர் ஆரம்ப சுகாதார கிலையத்திற்கு வந்து போகின்றனர் .
மேலும் இந்த காய்ச்சலால் பாதிப்படைந்த வயதானோர் பரிசலில் பயணித்து சிகிச்சைக்கு கொளத்தூருக்கு வர முடியாததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் மர்ம காய்ச்சலால் பாதிப்புக்குள்ளான ஏமனூரை சேர்ந்த சிவக்குமார் என்ற 11 ஆம் வகுப்பு மாணவர் கொளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு கிராமமே மர்ம காய்ச்சலால் பாதிப்படைந்திருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அங்கேயே தங்கி முழ நேரம் பணி புரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லையென்றால் சிட்டிஷன் படத்தில் வரும் வருவது போல்… அடுத்த அத்திப்பட்டியாக இந்த ஏமானூர் கிராமம்…. மர்மக்காய்ச்சலால் சிகிச்சை பெறமுடியாமல்... காணாமல் போனாலும் போய்விடும் என்று பயப்புடுகின்றனர்… அவ்வூர் மக்கள்….!?!?!?!?
செய்தி :- சக்திவேல்