கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபர் ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மோட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் விஜயகாந்த் (32) என்பவர் அவரது வீட்டின் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது சங்கராபுரம் காவல் துறையினறால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
அப்போது அவரிடம் இருந்து இரண்டு லாரி டியூபில் சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் பொறுப்பு அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அவர்கள் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி விஜயகாந்த் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை, கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செல்வராஜ் – செய்தியாளர்