Thu. Dec 19th, 2024

டிஎன்பிஎஸ்சி நடத்திய ஓட்டுநர், நடத்துனர் தேர்வு: அலைக்கழிக்கப்பட்ட இளைஞர்கள்!

புதுக்கோட்டையில் தேர்வு மையம் இல்லாததால் இளைஞர்கள்
அலைக்கழிக்கப்பட்டனர்.

ஓட்டுனருடன் நடத்துனர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுக்கு புதுக்கோட்டையில் தேர்வு மையம் இல்லாததால் வெளி மாவட்டங்களுக்கு சென்று இளைஞர்கள் தேர்வு எழுதினார்கள்.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுனருடன் நடத்துனர் பணிக்கு பன்னிரண்டாயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்தத் தேர்வுக்காக தமிழகத்தில் 10 முக்கிய நகரங்களில் உள்ள மையங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. குறிப்பாக புதுக்கோட்டையில் தேர்வு மையம் அறிவிக்கவில்லை. இதனால் அருகில் உள்ள திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் தேர்வு எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் தேர்வு எழுத சென்றவர்கள் அவதிப்பட்டனர். இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியைச் சேர்ந்த ராஜா கூறும் போது:

“தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 உள்ள பணிக்கு 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் தமிழகத்தில் 10 இடங்களில் மட்டுமே தேர்வு மையம் அனுமதிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் தேர்வு மையம் இல்லாததால் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் தேர்வு எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனக்கு தஞ்சை அருகே உள்ள வல்லத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இதனால் அதிகாலையிலேயே எழுந்து அவசர அவசரமாக தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இன்னும் ஒரு சிலருக்கு தேர்வு மையத்தை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. விண்ணப்பித்த அனைவருக்கும் சொந்த மாவட்டத்திலேயே தேர்வு மையம் அமைத்துக் கொடுத்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

தேர்வில் பொதுத்தமிழ் பகுதியில் 50 கேள்விகளும், பொதுஅறிவு பகுதியில் 50 கேள்விகளும் கேட்கப்பட்டது. இதில் ஒரு சில கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது. கனரக வாகன பொறியியல் சம்பந்தமான கேள்விகளும் சற்று கடினமாக இருந்தது. இருந்தாலும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதினோம்.” என்று கூறினார்.

அமானுல்லா புதுக்கோட்டை