Mon. Jul 8th, 2024

மணமேல்குடி அருகே மீனவர் வலையில் சிக்கிய 12 அடி நீளமுள்ள ராட்சத பாம்பு

மணமேல்குடி அருகே மீனவர் வலையில் 12 அடி நீளமுள்ள ராட்சத பாம்பு சிக்கியது.

மணமேல்குடி அருகே வடக்கு அம்மாபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமியப்பன். இவருக்கு சொந்தமான படகில் பழனிசாமி, வெங்கடாசலம் ஆகிய மூன்று மீனவர்களும் குறைந்த ஆழத்தில் மீன்பிடிக்க பயன்படும் பட்டி வலையில் மீன்பிடித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இவர்களுடைய வலையில் ராட்சத பாம்பு ஒன்று சிக்கி இருந்தது. சுமார் 12 அடி நீளமுள்ள இந்த பாம்பு சேனைப்பாம்பு என்று அழைக்கப்படுகிறது.

நீண்ட நேரமாக வலையில் சிக்கித் தவித்ததால் இந்த பாம்பு இறந்தது கிடந்தது. இந்த பாம்பு பொதுவாக சேற்றுப் பகுதிகளிலும், பொந்துகளிலும் உயிர் வாழும்.

குளிர்காலத்தில் மட்டுமே இந்த பாம்பு கரை பகுதிகளுக்கும், கரையோர ஆற்றுப்பகுதிகளுக்கும் வரும். 12 அடி நீளமுள்ள இந்த பாம்பு சிறிய வகை என்று மீனவர்கள் கூறுகின்றனர். பெரிய வகை பாம்புகள் 20 அடிக்கு மேல் இருக்கும் என்று கூறுகின்றனர்.

இந்தப் பாம்பு கணவாய் மீன்களை உணவாக உட்கொள்ளும். மனிதர்கள் நீச்சலடித்து செல்லும்போது குதிகால்களின் வெண்மை நிறத்தை வைத்து இந்த பாம்பு கடிக்கும். இந்தப் பாம்பு கடித்தால் சதைகளை பெயர்த்து எடுத்து விடும்.

கூர்மையான பற்களைக் கொண்டது. ஆனால் இந்த பாம்பு விஷத்தன்மையற்றது என்றும் மீனவர்கள் கூறுகின்றனர். மீனவர் வலையில் 12 அடி நீளமுள்ள பாம்பு சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அமானுல்லா புதுக்கோட்டை