Mon. Jul 8th, 2024

70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10% ஓய்வூதிய உயர்வு வழங்கக்கோரி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்!

70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10% ஓய்வூதிய உயர்வு வழங்குக.
ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 70 நிறைவடைந்தவர்களுக்கு 10 விழுக்காடு ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை திலகர் திடலில் ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.சரவணன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலச் செயலாளர் க.கருப்பையா உரையாற்றினார். போராட்டத்தை ஆதரித்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மு.முத்தையா, இணைச் செயலாளர் அ.மணவாளன், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல செயலாளர் எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக மாவட்டச் செயலாளர் கா.செயபாலன் வரவேற்க, பொருளாளர் நா.கிருஷ்ணன் நன்றி கூறினார்.

தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 70 நிறைவடைந்தவர்களுக்கு 10 விழுக்காடு ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பின்படி 80 வயதை எட்டியவுடன் 20 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செலவினத்தை அரசே முழுமையாக ஏற்க வேண்டும். மாதாந்திர மருத்துவப் படியை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை ஏற்று மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தில் கட்டணச் சலுகையை ஒன்றிய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். குடும்ப நல நிதியை ரூபாய் 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போரட்டத்தில் முழக்கங்களாக எழுப்பப்பட்டன.

அமானுல்லா புதுக்கோட்டை