தன் செயலுக்காக மன்னிப்பு கேட்ட பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!
கடந்த 7ம் தேதியிலிருந்து பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது- இப்போரில் பாலஸ்தீனம் தரப்பில் 8,000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், தற்போது தரைவழித் தாக்குதலுக்கு ஆயத்தமாகி வருகிறது.
இதற்கிடையே, ‘கடந்த 7ம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதல் குறித்து, இஸ்ரேல் ராணுவம், உளவு அமைப்பு உள்ளிட்டவை முன்னெச்சரிக்கை செய்ய வில்லை’ என, சமூக வலைதளத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியிருந்தார்.
உயிரை பணயம் வைத்து ஹமாஸ் அமைப்புடன் போராடி வரும் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக, பிரதமர் நெதன்யாகு கருத்து தெரிவித்து விட்டதாக பலர் குற்றம் சாட்டினர். இதற்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தன் கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் நெதன்யாகு டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நான் தவறு செய்து விட்டேன். நான் தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நம் தேசத்திற்காக போராடும் ராணுவம் மற்றும் படை வீரர்களுக்கு எப்போதும் முழு ஆதரவு வழங்குகிறேன் என்றார்.