Sun. Oct 6th, 2024

அகவிலைப்படி உயர்வு – தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தியாகராஜன்!

16 இலட்சம் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய அகவிலைப்படி உயர்வை உயர்த்தி ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி
மாநிலத் தலைவர் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

ஒன்றிய அரசு சில தினங்களுக்கு முன் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து ஆணை பிறப்பித்து இருந்தது. அதை பின்பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் 16 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

இது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனாவைக் காரணம் காட்டி அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு போன்றவை நிறுத்தப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக ஆட்சி அமைந்த உடன் 14 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள்.

பின்பு ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்த்தும் போது அந்த உயர்வு தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆறு மாதங்கள் கழித்து வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் காலத்தில் ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வை உயர்த்துகிறதோ அன்றைய தினமே தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உயர்த்தி வழங்குவார்கள் என்றும், தற்போது ஆறு மாதங்கள் காலதாமதமாக வழங்கப்படுகிறது என்ற கருத்தை முன்வைக்கும் போது கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் இனி வருங்காலங்களில் நிதி நெருக்கடிகள் இருந்தாலும் ஒன்றிய அரசு எந்த தேதியில் எத்தனை சதவீதம் அகவிலைப்படி உயர்த்துகிறதோ அந்த தேதியில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உயர்த்தப்படும் என்று கடந்த அகவிலைப்படி உயர்வின்போது ஆணையாக தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டிருந்தார்கள்.

சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்பது போல கடந்த அகவிலைப்படி அரசாணையில் சொன்னதை இன்று செய்து காண்பித்து இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். ஒன்றிய அரசு உயர்த்திய நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நான்கு சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி உள்ளது.

ஒன்றிய அரசு 1.7. 2023 முதல் முன்தேதி இட்டு வழங்கியுள்ளது. அதேபோலவே தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் முன் தேதி இட்டு 1.7.2023 முதல் வழங்கி உள்ளார்கள் நிலுவைத் தொகையுடன் அகவிலைப்படி உயர்வை பெற உள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்‌.

மேலும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் ஒவ்வொரு கோரிக்கைகளையும் படிப்படியாக தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இதன் மூலம் மேலும் அதிகரித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வை அறிவித்து 16 லட்சம் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் தியாகராஜன் கோடான கோடி நன்றியை பணிவோடு தெரிவித்துள்ளார்.

மேலும் எங்களின் பிரதான கோரிக்கையான மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு போன்றவற்றை விரைவில் கிடைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஆவண செய்ய வேண்டுமாய் இந்த நேரத்தில் வேண்டுகோளாக வைத்துள்ளார்.

அமானுல்லா புதுக்கோட்டை