Sat. Dec 21st, 2024

சென்னை இணையவழி காவல் நன்னடத்தை சரிபார்ப்பு சேவை துவக்க நிகழ்ச்சி..!!!

இணையவழி சேவை மூலம் காவல் நன்னடத்தை சரிபார்ப்பு செய்யும் சேவையை சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா விஸ்வநாதன் மற்றும் மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் ஆணையர் சீமா அகர்வால் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநில குற்ற ஆவண காப்பகமும், சென்னை பெருநகர காவல்துறையும் இணைந்து தமிழக காவல்துறையில் காவல் நன்னடத்தை சரிபார்ப்பு சேவை என்னும் இணையவழி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் அறிமுக நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் அ.கா விஸ்வநாதன், மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் ஆணையர் சீமா அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டு இந்த சேவையை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் அ.கா விஸ்வநாதன், இணையவழி காவல் நன்னடத்தை சரிபார்ப்பு சேவையானது தமிழகம் முழுவதும் இன்று துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த சேவையின் மூலம் வேலை தேவைப்படுபவர்கள், வெளிநாடு செல்வோர் உள்ளிட்ட பலர் தங்களது தேவையை குறைந்த நேரத்தில் பூர்த்தி செய்துகொள்ள முடியும் என தெரிவித்த அவர், கடந்த 2017 ஆம் ஆண்டு 15, 871 பேரும், 2018 ஆம் ஆண்டு 13,974 பேரும் பாஸ்போர்ட் சரிபார்ப்பு செய்துள்ளனர், இந்நிலையில் இதுபோன்ற தேவையுள்ளவர்கள் காலதாமதம் இல்லாமல் இந்த சேவை மூலம் காவல் நன்னடத்தை சரிபார்ப்பை மேற்கொள்ள இயலும் எனவும் ஆணையர் ஏ.கே.வி தெரிவித்தார்…

இந்த சேவையின் மூலம் தனிநபர் விபரம், வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு மற்றும் வீட்டு வேலையாட்கள் விபரம் சரிபார்ப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக இந்த சேவைகளுக்காக விண்ணப்பிக்கலாம் எனவும் மேற்படி சேவையினை பயன்படுத்துவதற்காக தனிநபர் ஒரு விண்ணப்பத்திற்கு 500 ரூபாயும், தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்திற்கு 1000 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இணையவழி வங்கி சேவை மூலம் இந்த கட்டணங்களை செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் ஆணையர் சீமா அகர்வால் பேசுகையில்:- மாவட்ட அளவில் அனைத்து இடங்களிலும் இந்த சேவையை காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையர்கள் துவக்கி வைப்பார்கள். இதன்மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு காவல்துறை விசாரணைக்குப் பின் 15 நாட்களுக்குள் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவித்தார். இது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் துவங்கப்பட்டுள்ளது எனவும் மேற்படி நபர்கள் அவரவர் விவரங்களை சரியாக அளிக்காத பட்சத்தில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இதுவரை காவல்துறையின் இணையதள சேவையை 1 கோடியே 37 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர் எனவும் 3 லட்சத்து 32 ஆயிரம் பேர் இணையதளம் வாயிலாக புகார் அளித்துள்ளதாகவும் ஒன்றரை லடாம் பேர் குறுஞ்செய்திகள் மூலம் பல தகவல்களை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்…