Fri. Dec 20th, 2024

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாள் – புதுக்கோட்டை இளைஞர் எழுச்சி பேரணி!

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாளினை யொட்டி புதுக்கோட்டையில் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின் இளைஞர் எழுச்சி நாள் பேரணி நடத்தினர்.

மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப் படுவதை யொட்டி மாவட்ட தலைநகரங்களில் நாட்டுநலப்பணித்திட்ட தன்னார்வலர்களை கொண்டு இளைஞர் எழுச்சி பேரணி நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா வழிகாட்டுதலில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் ( தன்னார்வலர்கள்) இளைஞர் எழுச்சி நாள் பேரணி நடைபெற்றது.

பேரணியினை புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் ஆ.இரமேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இப்பேரணி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் வரை சென்றடைந்தது. பேரணியில் சென்றவர்கள் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கூறிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அடையாள அட்டைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகையன், பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை யாசிரியர் ராஜேந்திரன், மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி.சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, பள்ளிகளின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள், பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி,திரு இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளி, டி.இ.எல்.சி மேல்நிலைப் பள்ளி ஆகியப்பள்ளிகளைச் சேர்ந்த நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அமானுல்லா புதுக்கோட்டை