Fri. Dec 20th, 2024

சைத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் 100 மடங்கு சந்தோஷம் – திண்டுக்கல் சீனிவாசன்

பாஜக என்ற சைத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் 1000 மடங்கு சந்தோஷம் என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாஜவுடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு. கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி நீடிக்கும் என வி.பி.துரைசாமி கூறியது குறித்து அவரிடமே கேட்க வேண்டும்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து அமையவுள்ள கூட்டணி குறித்து பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி முறிவால் வாக்குகள் சிதறாது. தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். எந்தெந்த கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும் என்பதை நாங்கள் பின்னர் அறிவிப்போம் என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிரிந்து சென்றதில் எங்களுக்கு வருத்தம் கிடையாது. 2024ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியோடு பாஜக மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுக்கும். அதற்கான அறிகுறிகள் தேர்தலுக்கு முன்பே தெரியும். நான் எப்போதும் ஒருவர் இருந்ததால் மகிழ்ச்சி அடைந்ததும் இல்லை. ஒருவர் சென்றுவிட்டதால் வருத்தமடைந்ததும் இல்லை என்றார்.

இந்நிலையில், இது குறித்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், இனி செத்தாலும் பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம். பாஜக என்ற சைத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சி அடைகிறோம். எடப்பாடி பழனிச்சாமி 1000 மடங்கு மகிழ்ச்சி அடைகிறார் என்றார்.