புதுக்கோட்டையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட கல்லூரி மருத்துவர்கள்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனூர் பகுதியில் இயங்கி வந்த கிரியா பாபாஜி யோகா சங்கம் கல்லூரியில் 21 ஆண்டுகளுக்கு முன்பு படித்து முடித்த இயன்முறை மருத்துவர்கள் ஒன்று கூடி கல்லூரியில் இணைந்த நாளை கேக் வெட்டி விழாவாக கொண்டாடினர்.
காலை 10 மணிக்கு ஒன்று கூடிய இயன்முறை மருத்துவர்கள் கல்லூரி வளாகங்கள் சுற்றியுள்ள நினைவிடங்களை சுற்றி வந்து மகிழ்ந்தனர். கல்லூரிச் சுவர்களையும் வகுப்பறை மற்றும் விடுதி அறைகளையும் சுற்றிப் பார்த்து பரவசப்பட்டு ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று நினைவு கூர்ந்தனர்.
பின்பு நடைபெற்ற விழாவில் இயன்முறை மருத்துவர் மணிகண்டன் பேசுகையில், கூட்டை விட்டுப் பறந்த குருவியென தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இயன்முறை மருத்துவராக சமூகப் பணி ஆற்றி வரும் நாம் இன்று கூடு திரும்பி இருக்கிறோம்.
எல்லோரையும் ஒன்றாக காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கரைந்து போகும் காலங்கள் இன்று மனம் நிறைந்து நம்மை ஒன்று சேர்த்து இருக்கிறது. கல்லூரி வளாகத்தை சுற்றி வரும் பொழுதெல்லாம் சில நினைவுகள் நம்மை சுற்றி வருகிறது. இந்த ஒருங்கிணைப்பு கூட்டமானது நட்பை பரிமாறிக் கொள்ளவும் நினைவுகளை அசை போடவும் வைத்திருக்கிறது.
இதேபோன்று வருடத்திற்கு ஒருமுறை கூடுவோம் ஒன்றிணைந்து பாடுவோம் என்றார். தொடர்ந்து பாடல்கள் மற்றும் கவிதையை இயன்முறை மருத்துவர் கவிஞர் கோவிந்தசாமி தொகுத்து வழங்கினார்.
விழாவில் கவிதா, அருணா, முருகானந்தம், சாந்தாராம், சகுபர் சாதிக், கோபு, கண்ணன், பார்த்திபன், செல்வ சிதம்பரம், அப்துல்சலாம், மணிகண்டன் மற்றும் வெளிநாடுகளில் இருந்து டான்கொயரி, சாமிநாதன, ஜெசிக்கலா,மதன கோபால் மற்றும் முராதேவி, ஷகிலா, கவிதா போன்றோர் இணைய வழியில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
நிகழ்வின் இறுதியில் மறைந்த நண்பர் சாம்டெனியலுக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில் ஒருங்கிணைப்பாளராக டாக்டர் கோபு செயல்பட்டார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் டாக்டர் பிரின்ஸ் செய்திருந்தார்.
அமானுல்லா புதுக்கோட்டை