Fri. Jul 5th, 2024

லியோ அதிகாலை காட்சி அனுமதி வழக்கு? – விசாரணை தள்ளிவைப்பு

நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

‘லியோ’ திரைப்படம் வெற்றிபெற வேண்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்று செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் முறையீடு செய்து வழக்கு தொடர்ந்தது.

இந்த அவசர வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

வரும் 19ம் தேதி அன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம். ஆனால் 5 காட்சிகளுக்கு தான் அனுமதி அளிக்கப்பட்டது என்று தயாரிப்பு நிறுவன தரப்பு வாதம் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா, அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ரசிகர்கள் காட்சிக்கு அனுமதிக்க அளிக்க கூடாது என்று மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி லியோ திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதிக்கோரிய வழக்கை நாளை தள்ளி வைத்தார்.