Fri. Dec 20th, 2024

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் அதிபர் முதல்வர் காலமானார்!

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் அதிபரும், முதல்வரும், செயலாளருமான அருள் முனைவர் ஜான் பிரிட்டோ (78) இன்று மாலை மருத்துவமனையில் காலமானார்.

கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது, இன்று மாலை 5 15 மணி அளவில் மாரடைப்பின் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.

தாவரவியல் வல்லுனரான அருட்தந்தை பல்வேறு ஆண்டுகள் கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியராகவும், கல்லூரியின் முதல்வராகவும், செயலாளராகவும், மற்றும் ,பல பொறுப்புகளில் இருந்து கல்லூரியை வழிநடத்தி இருக்கிறார்.

கல்லூரியில் உள்ள மிகவும் பழமையான அருங்காட்சியகம் மற்றும் தாவர பதப்படுத்தும் ஆய்வகம் ஆகியன ஏற்படுத்தி திறம்பட நடத்தி தாவரவியல் ஆய்வினை ஊக்கப்படுத்தி இருக்கிறார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிண்டிகேட் குழு உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். கல்லூரியில் ஏழை எளிய மாணவர்களை அனுமதித்து தேவையான உதவிகளையும் செய்து, வேலை வாய்ப்பும் பெற்று தந்திருக்கிறார். அவர்களில் பலர் மேலை நாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.

அருட்தந்தையின் திருஉடல் முன்னாள் இந்நாள் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் சேசு சபை தந்தையர்கள் இல்லத்தில் வைக்கப்பட்டு மாலை 3 மணி அளவில் திருச்சி கல்லூரியின் லூர்தன்னை ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு இறுதிச்சடங்கானது ஆலயத்தின் பின்புறமுள்ள கல்லறையில் நடைபெறும்