Thu. Dec 19th, 2024

சென்னையை உலுக்கிய என்கவுண்டர் : மாஜிஸ்திரேட் இன்று விசாரணை!

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் பகுதியில், காவலர்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் பார்த்திபனின் கொலை வழக்கில் ரவுடி சரவணனை போலீசார் தேடிவந்தநிலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்தது.

பார்த்திபன் கொலை வழக்கில் 10 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட முத்து சரவணன் என்ற பிரபல ரவுடியை போலீசார் தேடி வந்தனர்.

திருவள்ளூர், புதூர் மாரம்பேடு பகுதியில் ரவுடி முத்து சரவணன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அவரை பிடிக்க தனிப்படை அங்கு விரைந்தது. அவருடன் சண்டே சதீஷ் என்ற மற்றொரு ரவுடியும் இருந்துள்ளார்.

இவர்களை நேற்று போலீசார் பிடிக்க முயன்றபோது, இருவரும் தப்பிக்க முயன்றதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் காலில் அடிபட்ட சண்டே சதீஷ் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் ரவுடி முத்து சரவணன் உயிரிழந்தார். ரவுடி சதீஷ் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார்.

தற்போது இந்தச் செய்தில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் முத்து சரவணன், சதீஷ் உடல்களை பெற போற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஸ்டாலின் மருத்துவமனையிலேயே இருவரது உடல்களும் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரவுடிகள் முத்து சரவணன், சதீஷ் என்கவுண்டர் வழக்கில் பொன்னேரி மாஜிஸ்திரேட் இன்று விசாரணை மேற்கொள்ள உள்ளார். என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் நேரில் பரிவையிட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போலீசாரிடமும் விசாரணை நடத்த உள்ளார்.