குடியிருக்க வீடு கோரி கூத்தாடிவயல் நரிக்குறவர் இனமக்கள் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கூத்தாடிவயலைச் சேர்ந்த நரிக்குறவர் இனமக்கள் தங்களுக்கு அரசு குடியிருப்பு கட்டித்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது
அறந்தாங்கி அருகே கூத்தாடிவயலில் கடந்த 1972-இல் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் எங்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டன. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குடியிருப்பு முழுமையாக பழுதடைந்து வசிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இப்போது எங்களின் குடும்பங்களின் எண்ணிக்கையும் இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் ஒரே வீட்டுக்குள் 4 கும்பங்கள் வரை வசிக்க வேண்டி உள்ளது.
எனவே, பழுதடைந்த வீடுகளை இடித்துவிட்டு, முழுமையாக அனைவருக்கும் அரசுக் குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த 2021 முதல் ஒவ்வோர் ஆண்டும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை மனுக்களை தொடர்ந்து அளித்து வருவதாகவும், ஒவ்வொரு முறையும் அழைத்துப் பேசியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமானுல்லா புதுக்கோட்டை