இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா நிற்கும் – இந்திய பிரதமர் மோடி!
பாலஸ்தீன பயங்கரவாதியான ஹமாஸுடனான போருக்கு எதிராக இந்தியா இஸ்ரேலுடன் துணை நிற்கிறது என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் பல ஆண்டுக் காலமாக மோதல் நிலவி வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்குரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகிறது.
பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் ‘ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்’ என்ற பெயரில் இன்று இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.
காசாவில் 20 நிமிடங்களில் சுமார் 5 ஆயிரம் ராக்கெட்டுக்களை இஸ்ரேல் மீது ஏவியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தி வருகிறது.
தற்போது இஸ்ரேல் பதிலுக்கு தாக்குதல் நடத்தத் துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், இஸ்ரேலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்.