Mon. Jul 8th, 2024

புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு உயிரிழந்தார்!

கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு (60) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், உறையூரில் பிறந்தவர் ஒரிசா பாலு. இவருடைய இயற்பெயர் சிவ பாலசுப்ரமணியன். பல ஆண்டுகளாக ஒரிசாவில் பணியாற்றியதால் ஒரிசா பாலு என்று அழைக்கப்பட்டார்.

இவர் தமிழர்களின் கடல்சார் தொன்மை தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும், தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடற்பயணம் மேற்கொண்டதை இவர்தான் கண்டுபிடித்தார்.

குமரிக்கண்டம், கடலில் மூழ்கிய பூம்புகார் உள்பட கடல் சார்ந்த ஆய்வுகளில் இவரது பங்களிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இவருடைய மறைவு ஒட்டுமொத்த வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய இரங்கலுக்கு சமூகவலைத்தளங்களில் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஒரிசா பாலு மறைவிற்கு தமிழக முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.