மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் மீதான வழக்கிற்கு இன்று தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்…!!
கடந்த 18-12-2018 அன்று கோவை R.S.புரம் காவல் நிலையத்தின் குற்ற எண்1379/ 2018 என்ற வழக்கில் 353 , 384, & 506(1) இ.த.ச. பிரிவுகளின் கீழ் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கணேசன் என்பவர் இளநிலைப் பொறியாளராக கோவை மாநகராட்சியில் பணிபுரிவதாகவும், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் மேற்படி கணேசன் டீ குடிக்கச் செல்லும் போது ஒருவர் வந்து தான் பத்திரிக்கை நிருபர் அன்பழகன் என்றும் உள்ளாட்சி அலசலில் கணேசனைப் பற்றி எழுதாமல் இருக்க ஒரு லட்சம் வேண்டும் என்று கேட்டு சாதிப் பெயர் சொல்லி மிரட்டியதால் நண்பர்கள் தைரியம் கொடுத்து டிசம்பர் மாதம் 18ம் தேதி புகார் கொடுத்ததாகவும் காவல்துறை ஒரு வழக்குப்பதிவு செய்து பத்திரிக்கைச் செய்திக்குறிப்பும் வெளியிட்டது.
மேற்படி வழக்கில் கடந்த 21ந் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பத்திரிக்கையாளர் அன்பழகனுக்கு முன் ஜாமீன் வழங்கியது.
மேற்படி வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என்றும், வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அன்பழகன் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தினை நாடினார்.
இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வழக்குப் பட்டியலில் 75ம் எண்ணாக விசாரணைக்கு வந்தது.
அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரு. ஒம்பிரகாஷ், வழக்கறிஞர்கள் குமாரதேவன், பிரகாஷ், வெங்கடேஷ் ஆஜராயினர்.
அப்போது மூத்த வழக்கறிஞர் தன் வாதத்தில் உள்ளாட்சி இலாக்காவில் நடைபெறும் ஊழல்களை RTI சட்டம் மூலம் தகவல் பெற்று வெளியிட்டதால் மொத்தம் 23 வழக்குகள் மூத்த பத்திரிக்கையாளர் அன்பழகன் மீது பதிவு செய்யப்பட்டு பின்பு குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். அனைத்து வழக்குகளும் உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு குண்டர் சட்டக் கைதும் ரத்து செய்யப்பட்டது. ஒரே இலாக்காவில் பணிபுரியும் அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளது அவர்கள் மீதுள்ள பயத்தினால் தான். ஒரு பத்திரிக்கை நிருபர் தன் கடமையைச் செய்ய விடாமல் அரசு தடுத்து பொய் வழக்குப் போடுகிறது என்றும் கடந்த 2017 முதல் இது தொடர்ந்து நடக்கிறது என்றும் சட்டப்படி நிலைக்கத் தக்க வழக்கு இது அல்ல என்று வாதிட்டார்.
எத்தனை வழக்குகள் போடப்பட்டுள்ளது என்ற விவரமும் தடை செய்யப்பட்ட விவரமும் உள்ளதா என்று நீதிபதி கேட்க, அத்தனை விவரங்களையும் மூத்த வழக்கறிஞர் நீதிபதியிடம் அளித்தார். அதைப் பரிசீலித்த நீதிபதி,
R.S.புரம் காவல் நிலைய வழக்கு எண் 1379/ 2018 ன் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
– சென்னை உயர் நீதிமன்ற மக்கள் செய்தி மைய நிருபர்கள் குழு.